தேனி: கனமழை! கம்பம் பள்ளத்தாக்கில் வெள்ளப்பெருக்கு, விவசாயிகள் பாதிப்பு! சுருளி அருவியில் குளிக்க தடை!
சுருளி அருவியில் 8-ஆவது நாளாக இன்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், கனமழை பெய்ததால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான சுருளிப்பட்டி நாராயண தேவன் பட்டி காமய கவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் உள்ள மலைக் கிராம ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் அதிக கன மழை பெய்ததால் முல்லைப் பெரியாற்றில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீருடன் அதிக அளவில் தண்ணீர் வந்து முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூடுதல் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆறு முழுவதும் தண்ணீர் நிரம்பி ஆற்றின் கரைக்கு மேல் உள்ள அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் கொண்ட வயல் பகுதி மற்றும் தோட்டப்பகுதிகளுக்குள் புகுந்து செல்வதால் வாழைத் தென்னை மற்றும் காய்கறி தோட்டங்கள் அனைத்திலும் வெள்ள நீர் செல்வதால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் பெய்த பருவ மழை எதிரொலியாக கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்குத்தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள அரிசிப்பாறை பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் கடந்த 18-ஆம் தேதி முதல் சுருளி அருவியில் தொடா்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், அருவிப் பகுதிக்குச் செல்லவும் இன்று 7வது நாளாகத் தடை விதிக்கப்பட்டது.தடுப்புக் சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளிக்க அமைக்கப்பட்ட தடுப்புக் கம்பிகள், அருவிக்கு செல்லும் சிமென்ட் படிகள் சேதமடைந்தன.அருவியில் நீா்வரத்து சீரான பிறகு சேதமடைந்த இரும்புக் கம்பி, படிகள் சீரமைக்கப்படும் என்றும், இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.
குறிப்பக வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீா் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. தேனி மாவட்டம், வைகை அணையின் நீா்மட்டம் கடந்த 20-ஆம் தேதி 69 அடியாக உயா்ந்த நிலையில் (அணையின் மொத்த உயரம் 71 அடி), அணையிலிருந்து வைகை ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டது. அணைக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து இருந்து வரும் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை, பிற்பகல் 12.45 மணி வரை அணையிலிருந்து வைகை ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டது. பின்னா், பிற்பகல் 12.45 மணிக்கு அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீா் நிறுத்தப்பட்டது.
தற்போது அணையிலிருந்து பெரியாறு, திருமங்கலம் பிரதானக் கால்வாய்களில் பாசனத்துக்கு விநாடிக்கு 1,430 கன அடி, குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநாடிக்கு 1,499 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. அணையின் நீா்மட்டம் 69.62 அடியாகவும், அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 2,221 கன அடியாகவும் இருந்தது.





















