தேனி : கஞ்சா விற்பனைக்கு உடந்தையா? அல்லிநகர காவல் நிலைய ஆய்வாளர் உட்பட 4 போலிசார் பணியிடமாற்றம்
தேனி அல்லி நகரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் உட்பட 4 போலிசார் பணியிடமாற்றம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தேனி மாவட்டத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனையை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்படுவதோடு, அவர்களின் சொத்துகளை முடக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சில கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.
TN Rains : 14 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் மழை! எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்!
கஞ்சா வியாபாரிகளுக்கு போலீசார் உடந்தையாக இருந்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் எச்சரித்து இருந்தார். இந்நிலையில், அல்லிநகரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனைக்கு போலீசாரே உடந்தையாக செயல்படுவதாக மாவட்ட கண்காணிப்பாளருக்கு புகார்கள் வந்தன.
இந்த புகார்கள் மீது மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே நேரடி விசாரணை நடத்தினார். இந்த விசாரணை எதிரொலியாக, அல்லிநகரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும், காவலர்கள் ராஜா, ஸ்ரீதர், வாலிராஜன் ஆகிய 3 பேரை ஆயுதப்படை பிரிவுக்கும் மாற்றம் செய்து கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே அதிரடி உத்தரவிட்டார்.
அதன்படி ஆய்வாளர் உள்பட 4 பேரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த புகார்களின் உண்மைத்தன்மை குறித்து முழுமையாக விசாரித்து துறைவாரியான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலிசார் தரப்பில் கூறப்படுகிறது. அதிரடியாக போலிசார் இடமாற்றம் செய்த இந்த சம்பவம் தேனி மாவட்ட காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா விற்றால் சொத்துக்கள் முடக்கம் - தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
மேலும் தமிழக, கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமான கம்பம் ,கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சா அதிகளவில் கேரளாவிற்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருவதால் இந்த பகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் போலிசார் யாரேனும் கஞ்சா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளனரா என்ற கூடுதல் கண்காணிப்பு உள்ளதாகவும் போலிசார் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்