அதிமுகவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத் தேவர் காலமானார்
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே வென்ற அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும், திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாயத் தேவர் காலமானார்.
அதிமுக முதன் முதலில் சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத் தேர்தல். திமுகவில் இருந்து பிரிந்த புதிய கட்சியை தொடங்கிய எம்ஜிஆர் முதல் சந்தித்த தேர்தலிலேயே அவருக்கு வெற்றியை தேடித் தந்தது திண்டுக்கல் தொகுதி. அப்போது ஆட்சியிலும் அதிகாரத்திலும் மிகப் பெரும் பலத்துடன் இருந்த திமுகவை மூன்றாவது இடதுக்கு தள்ளி இந்த தேர்தலில் எம்ஜிஆர் களமிறக்கிய வேட்பாளர் மாயத் தேவர் பெரும் வெற்றி பெற்றார்.
அதிமுகவுக்கு தேர்தல் தோறும் வெற்றி தேடித்தரும் சின்னமான இரட்டை இலையும் முதன் முதலில் இந்த தேர்தலில் தான் களம் இறங்கியது. இந்த தேர்தலில் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்தைப் பெற திமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. அந்த அளவுக்கு மக்கள் பலத்துடன் களமிறங்கிய எம்ஜிஆர் என்ற பெயரே மாயத்தேவருக்கு வெற்றியைத் தேடி தந்தது. இதனால் அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி என்ற பெருமையும் மாயத்தேவருக்கு உண்டு.
தமிழக முதல்வராக இருந்த அண்ணாவின் மறைவுக்கு பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் தமிழக முதல்வராகவும் கலைஞர் கருணாநிதி பதவி ஏற்றார். 1972 ஆம் ஆண்டு சில விவகாரங்கள் காரணமாக அக்டோபர் 10ஆம் தேதி எம்ஜிஆர் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர் அதே ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி எம்ஜிஆர் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதை அடுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதோடு திமுக கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.
பலகட்ட அரசியல் நிகழ்வுகளுக்கு பிறகு புதிய கட்சி ஒன்றினை தொடங்க விரும்பிய எம்ஜிஆர் அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் அதிமுக என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது ஒரு சாதாரண தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன் என அறிவித்தார். பிற்காலத்தில் ராமலிங்கத்திற்கு மேல் சபை உறுப்பினர் பதவி அளித்தார். இந்த கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் பெற்றது அவ்வாறு அக்டோபர் 17ஆம் தேதி 1972 ஆம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்டது.
முதல் தேர்தல் அதிமுகவில் தொடர்ந்து பலர் இணைந்த நிலையில் மெல்ல மெல்ல அதிமுக வளர்ந்தது. இதனிடைய 1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ராஜாங்கம் மரணம் அடைந்தார். இதை அடுத்து அந்த தொகுதியில் மே 20ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக அந்த தேர்தலில் முதல் முறையாக களம் கண்டது அதிமுக சார்பில் வேட்பாளராக மாயத் தேவர் நிறுத்தப்பட்டார்.
அதிமுகவுக்கு எப்படி எம்ஜிஆர் ஜெயலலிதா ஒரு முகமாக இருக்கிறார்களோ அதே போல் தான் இரட்டை இலையும் இந்தத் தேர்தலில் தான் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு வழங்கப்பட்டு அதில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மாயத் தேவர். இதன் மூலம் அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
தீவிர எம்ஜிஆர் விசுவாசியான மாயத் தேவர், பெரிய கருப்பத் தேவர்-பெருமாயி தம்பதியினருக்கு 15 அக்டோபர் 1935-இல் உசிலம்பட்டி அருகே டி. உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேனிலைப் பள்ளியிலும், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், சட்டக்கல்வியை சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தவர். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகறிஞராக பணிபுரிந்தவர்.
பின்னர் 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக எம்பியாக தேர்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் 1980ஆம் ஆண்டில் திமுகவில் சேர்ந்து எம்பியாகவும் மாயத்தேவர் இருந்தார். அவரிடம் உதவியாளராக இருந்தவர்தான் தற்போதைய முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன். அதன்பிறகு 1984ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திமுகவில் தீவிர அரசியலில் இருந்த மாயத் தேவர், பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார். வயது முதிர்வு காரணமாக திண்டுக்கல் சின்னாளபட்டியில் மனைவியுடன் வசித்து வந்த இவர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88. இதனையடுத்து அவரது மறைவுக்கு அதிமுகவினர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்