கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு
கேரளாவில் 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72,141 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா என்ற நோய் தொற்று இந்தியா உட்பட உலகையே அச்சுறுத்தியது. அதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கொரோனா நோய் தொற்று பரவி பல லட்ச மக்களின் உயிரை பறித்தது. பின்னர் தடுப்பூசி சொலுத்தப்பட்டு கொஞ்சம், கொஞ்சமாக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. 2022 இறுதிக்கு பிறகு கொரோனா தொற்று குறித்து எந்த செய்தியும் இல்லை. உலக நாடுகள் பழைய நிலைக்கு திரும்பின. மக்களும் நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக கொரோனா குறித்த செய்திகள் வர தொடங்கி உள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற இடங்களில் மக்கள் பாதிக்கப்பட தொடங்கி உள்ளனர். இந்தியாவிலும் பரவ தொடங்கியதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 1ஆம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது. மேலும், தொற்று பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக கோட்டயம் மாவட்டத்தில் 57 பேரும், எர்ணாகுளத்தில் 34 பேரும் திருவனந்தபுரத்தில் 30 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், வரும் நாட்களில் தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களில் கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 59 வயது ஆண் மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்த 64 வயது ஆண் ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72,141 ஆக அதிகரித்துள்ளது.
அதே சமயம், கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்த 2 நபர்களுக்கு ஏற்கனவே இதய நோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்படுவது கேரள சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பு பணிகளை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது என்றும், கொரோனா பரவல் தீவிரமடையவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல், சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேபோன்று மருத்துவமனைக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கர்ப்பிணிகள், வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





















