(Source: ECI/ABP News/ABP Majha)
பழனி அருகே கந்தப்பகவுண்டன் வலசு கிராமத்தில் 2 தலையுடன் பிறந்த கன்று
கன்றுவுக்கு இரண்டு தலைகள், 4 கண்கள், 2 காதுகள் இருந்தன. அப்பகுதி மக்கள் அங்கு வந்து ஆச்சரியத்துடன் அதிசய கன்றுக்குட்டியின் உடலை பார்த்து சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கந்தப்பகவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது பசுமாடு ஒன்று சினையாக இருந்தது. நேற்று முன்தினம் அந்த பசுமாடு கன்று ஈன்றக்கூடிய சூழலில் இருந்தது. ஆனால் வெகுநேரம் ஆகியும் ஈன்ற முடியாமல் பசுமாடு தவித்தது. உடனே பெரியசாமி, பழனி கால்நடை டாக்டர் ராமசாமிக்கு தகவல் கொடுத்தார். அதையடுத்து பெரியசாமி வீட்டுக்கு வந்து பசுமாட்டை டாக்டர் சோதனை செய்தார். சோதனையில், பசுமாட்டின் வயிற்றில் உள்ள கன்றுவுக்கு 2 தலைகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக பழனி கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனருக்கு தகவல் கொடுத்தார்.
அதையடுத்து கால்நடை உதவி இயக்குனர் சுரேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த பசுமாடு இயல்பாக கன்று ஈன்றக்கூடிய சூழலில் இல்லை என்பதை அறிந்தனர். எனவே பசுமாட்டுக்கு அறுவை சிகிச்சை செய்து கன்றுவை எடுக்க முடிவு செய்தனர். அதையடுத்து வீட்டு அருகே உள்ள தொழுவத்தில் கிருமிநாசினி கொண்டு தூய்மைபடுத்தி அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். தொடர்ந்து உதவி இயக்குனர் சுரேஷ் தலைமையில் டாக்டர்கள் செல்வக்குமார், ரகுபதி, திவாகர், சபரி அருள் ஆகியோர் பசுமாட்டுக்கு மயக்கஊசி செலுத்தி அறுவை சிகிச்சை செய்து கன்றுவை வெளியே எடுத்தனர். ஆனால் அந்த கன்று ஏற்கனவே இறந்து இருப்பது தெரியவந்தது. அந்த கன்றுவுக்கு இரண்டு தலைகள், 4 கண்கள், 2 காதுகள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு வந்து ஆச்சரியத்துடன் அதிசய கன்றுக்குட்டியின் உடலை பார்த்து சென்றனர்.
மேலும் உடனே அறுவை சிகிச்சை செய்து பசுமாட்டை காப்பாற்றிய டாக்டர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர். 2 தலை கொண்ட கன்றுக்குட்டி குறித்து கால்நடை உதவி இயக்குனர் சுரேஷ் கூறும்போது, "மரபணு குறைபாட்டால் பசுமாடுகளுக்கு இதுபோன்று 2 தலை கொண்ட கன்று உருவாகும். அதன்படி இந்த பசுவுக்கும் மரபணு குறைபாட்டால் 2 தலை கொண்ட காளைக்கன்று உருவாகியுள்ளது. அந்த கன்று ஈன்றுவதற்கு மாடு கடும் சிரமப்படும். சில நேரங்களில் உயிரிழக்கவும் நேரிடும். எனவேதான் விரைவாக அறுவை சிகிச்சை செய்து கன்றுவை வெளியே எடுத்தோம். இதனால் பசு நலமுடன் உள்ளது. 10 நாட்கள் பசுமாட்டை எங்களது கண்காணிப்பில் வைக்க உள்ளோம். அதற்கு சத்தான தீவனம் கொடுக்க விவசாயிக்கு பரிந்துரை செய்துள்ளோம். எனது அனுபவத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்று 2 தலை கொண்ட கன்று பிறந்தது. அதையடுத்து இப்போதுதான் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்