"திமுகவின் சர்வாதிகார ஆட்சி; கொலை நடக்காத நாட்களே இல்லை" - ஆர்.பி.உதயகுமார் சாடல்
திமுக அரசு கடந்த 9 மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய பின்பு மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவையின் சார்பில், அம்மாபட்டியில் ஏழை,எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம், மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் ஆர் பி.உதயகுமார் பேசியதாவது ”எடப்பாடியாரின் பிறந்த நாள் விழாவை கழக அம்மா பேரவை மக்கள் பயன்பெறும் வண்ணம், வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா முதல் அலையின்போது மக்கள் உயிர்தான் முக்கியம் என்று கருதி, 32 வருவாய் மாவட்டங்களில் நேரடியாக சென்று விவசாயிகள், மாணவர்கள், அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என அனைவரும் சந்தித்து ஆறுதல் கூறி மக்களின் கவசமாக எடப்பாடியார் திகழ்ந்தார். கர்ணனுக்கு கவசகுண்டலம் போல் மக்களுக்கு உயர் கவசமாக எடப்பாடியார் திகழ்ந்தார்.
அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை, மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை என ஒரு பற்றாக்குறை அரசாக திமுக அரசு திகழ்கிறது. திமுக அரசின் சர்வாதிகார ஆட்சியால் தமிழகம் தலை குனிந்து உள்ளது. தமிழகத்தில் கொலை நடக்காத நாட்களே இல்லை. கடந்த நான்கரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்ததால் மக்கள் இதயங்களில் எடப்பாடியார் வாழ்ந்து வருகிறார். திமுகவை இரண்டு ஆண்டுகால ஆட்சியில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ,பால் விலை உயர்வு ,சாக்கடை வரி உயர்வு, என மக்களை வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் மொத்தம் வீட்டு மின் நுகர்வோர் மட்டும் 2 கோடி 37 லட்சம் என்கிற அந்த புள்ளி விவரங்கள் நமக்கு தெரிவிக்கின்றது. 2 கோடியே 37 லட்சம் மின் நுகர்வோர்கள் பாதிக்கப்படக்கூடிய வகையிலே, திமுக அரசு கடந்த 2022 செப்டம்பர் 10ஆம் தேதி, மின் கட்டணத்தை உயர்த்தியது . ஒரு யூனிட்டுக்கு கணக்கீடு செய்து, 400 யூனிட் வரை 4.50ரூ, 500 யூனிட் வரை 6 ரூபாய், 6,00யூனிட் வரை 8 ரூபாய், 800 யூனிட் 9 ரூபாய்,1000 யூனிட் 10 ரூபாய், 1000 யூனிட்டுக்கு மேல் 11 ரூபாய் என்று யூனிட்டுகளை அந்த வரிசையிலே வகைப்படுத்தி மின் கட்டணத்தை உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் 50 லட்சம் சிறு,குறு நிறுவனங்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ ஒரு கோடி பேர் வேலை செய்கின்றனர். ஏற்கனவே கொரோனா காலங்களில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வர முடியாமல் கண்ணீர் வடிப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இந்த அரசு அதை கண்டு கண்ணீரை துடைப்பதற்கு எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை. மேலும் சுமை ஏற்படுத்து வண்ணம் மின்கட்டணத்தை உயர்த்தியதால் சிறு,குறு நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேதனை உச்சமாக இருந்த இந்த மின் கட்டணத்தை, எடப்பாடியார் மீண்டும் இதை திரும்ப பெறவலியுறுத்தி, திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினார். தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்சுவது போல் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள அனுமதியின் பேரிலே அடுத்த மாதம் முதல் மின்கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்து இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதில் பெரிய கொடுமையிலும் கொடுமை என்னவென்று சொன்னால், 9 மாத இடைவெளியில் மின்சார கட்டணத்தை மீண்டும் உயர்த்துகின்றனர். எதிர்கட்சியாக இருக்கிறபோது மு.க.ஸ்டாலின் உயர்தாத மின் கட்டணத்திற்கு போராட்டம் நடத்தினார். இன்றைக்கு அவருடைய ஆட்சியிலே மின்சாரம் கட்டணம் உயர்த்துகிறாரே இது நியாயமா? என்பதுதான் இன்றைய தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வியாக இருக்கிறது. எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போது, மத்திய அரசு அழுத்தம் கொடுத்தபோது நிதிசுமை இருந்த போதும் ,பல்வேறு சவால்களை சந்தித்து ஒரு பைசா கூட மின் கட்டண உயர்வு இல்லாமல் அன்னை தமிழக மக்களை காப்பாற்றினார். இந்த இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சியில் பாதாள வரை சென்ற மக்களுக்கு, இப்போது மின் கட்டணம் உயர்வு என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது இதை உடனடியாக கைவிட வேண்டும்” என்று கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்