திண்டுக்கல், தேனியில் கொட்டி தீர்த்த கோடை மழை...மகிழ்ச்சியில் மக்கள் ... வேதனையில் விவசாயிகள்
பல இலட்சம் மதிப்பிலான 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைமரங்கள் ஒடிந்து சாய்ந்து சேதமடைந்துள்ளது, இதனால் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.
தமிழகமெங்கும் மே நான்காம் தேதி முதல் அக்னி வெயில் ஆரம்பித்துள்ளது. இதனால் தமிழகமெங்கும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சிறிது நேரம் லேசான மழை பெய்து வந்தது. இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிக அளவு இருந்து வந்த நிலையில் மாலை சுமார் 3:30 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் இடியுடன் கூடிய கனமழை சுமார் ஒன்றரை மணி நேரமாக பெய்து வருகிறது.
திண்டுக்கல் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமான மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான தட்ப வெட்ப நிலை நிலவி மாறியது. இம்மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இதே போல் தேனி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. ஆனால் மாலை நேரத்திற்கு மேல் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கன மழை பெய்தது. இன்றும் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், கூடலூர், போடி, சின்னமனூர், உத்தமபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் மாலை நேரத்திற்கு மேல் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் பல இலட்சம் மதிப்பிலான 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைமரங்கள் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த வைகை ஆற்று கரையோரமுள்ள சிவஞானபுரம், புதூர் கிராமங்களை சுற்றி 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யபட்டுள்ளது. இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை மரங்கள் தற்போது நன்கு விளைந்து பூ பிச்சுமாக இன்னும் ஒருசில வாரங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், இன்று பலத்த சூறாவளி காற்றுடன் இடியுடன் கனமழை பெய்தது. இதில் பல இலட்சம் மதிப்பிலான 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைமரங்கள் ஒடிந்து சாய்ந்து சேதமடைந்துள்ளது, இதனால் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயி பாலசுப்ரமணி கூறுகையில், வைகையாற்று படுகை என்பதால் இப்பகுதியில் எப்போதுமே நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்களை சுழற்சி முறையில் அதிகளவில் சாகுபடி செய்வது வழக்கம், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் பரவலாக வழக்கத்தைவிட கூடுதலாக நல்ல மழை பெய்து வந்ததால் வழக்கத்தைவிட கூடுதலாக வாழை சாகுபடி செய்துள்ளோம். இந்நிலையில் தற்போது இப்பகுதியில் பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை மற்றும் தென்னை, அகத்தி மரங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள வாழை பயிர்கள் ஓடிந்தும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளோம், எனவே வேளாண்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக கூறினார்.





















