Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
Chennai Encounter: தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் சென்னையில் தொப்பை கணேசன் எனும் ரவுடி, போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Chennai Encounter: கொள்ளை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த ரவுடி தொப்பை கணேசன் , போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சென்னையில் என்கவுன்டர் - ரவுடி மரணம்
சென்னையில் மாதவரம் ரவுண்டானா அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தொப்பை கணேசன் ரவுடி குண்டடி பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 15 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வந்த நிலையில், அவர் போலீசாரின் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்கவுன்டரில் பலியான தொப்பை கணேசனின் உடல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு - நடந்தது என்ன?
கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி மாதவரம் ரவுண்டானா அருகே வீடு புகுந்து உரிமையாளர்களை கட்டிப் போட்டு, பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் தொப்பை கணேசன் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை தேடி வந்த நிலையில், மாதவரம் ரவுண்டானா பகுதியில் போலீசார் சுற்றி வளைத்தனர். அந்த நேரத்தில் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகவும், இதனால் பாதுகாப்பிற்காக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொப்பை கணேசன் உயிரிழந்ததகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
யார் இந்த தொப்பை கணேசன்?
பிரபல ரவுடியாக அறியப்பட்ட சேராவின் கூட்டாளியாக அறியப்படும் தொப்பை கணேசன் மீது, 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். ஒரு வருடத்திற்கு முன்பாக கூட திருத்தணி அருகே அறிவழகன் என்பவரை துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின் பேரில் வேறொரு வழக்கில் தொப்பை கணேசனை கைது செய்து இருந்தனர். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த அவர், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். மாதவரம் கொள்ளை வழக்கில் ஏற்கனவே இரண்டு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற தேர்தல் பரபரப்பு..
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே, மாநில தலைநகர் சென்னையில் இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ஒட்டுமொத்த நிர்வாக அதிகாரமும் தேர்தல் ஆணையம் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஜனவரி 27ம் தேதியன்று, பெரம்பலூரில் ரவுடி கொட்டு ராஜா என்பவர் காவல்துறையின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக அழைத்துச் சென்றபோது, காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்























