மேலும் அறிய
சிவகங்கை நாட்டாகுடி கிராமத்தை மீட்க என்ன செய்ய வேண்டும்? - 8 கோரிக்கை இது தான் !
நாட்டாகுடி கிராமத்திற்கு தினமும் ஏதாவது ஒரு பேருந்து குறைந்தபட்சம் ஒரு நேரத்துக்காவது வந்து செல்லும் வசதி செய்ய வேண்டும். - இது ஒரு முக்கிய கோரிக்கை.

நாட்டாகுடி
Source : whats app
அதிகாரிகள் வரும் பொழுது தண்ணீர் வந்தது போல், குறைந்த பட்சம் இரண்டு நாளுக்கு ஒரு முறையாவது தண்ணீர் வர வேண்டும். - சமூக ஆர்வலர்கோரிக்கை.
நாட்டாகுடி கிராமம்
சிவகங்கை மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இலந்தங்குடி, நாட்டாகுடி, பி.வேலாங்குளம், மாத்தூர், புதுக்குடியிருப்பு மற்றும் மீனாட்சிபுரம் என 6 உட்கடை கிராமங்கள் உள்ளன. இதில், நாட்டாகுடி கிராமத்தில் மொத்தம் 56 வீடுகள் உள்ளன. அதில், சுமார் 24 வீடுகளில் மக்கள் குடியிருந்து வந்தனர். இக்கிராமமானது, மொத்தம் 2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இக்கிராமத்தின் மக்கள் தொகையில் ஆண்கள் 58 நபர்களும் மற்றும் பெண்கள் 52 நபர்களும் என மொத்தம் 110 பொதுமக்கள் வசித்தனர். இக்கிராமமானது, படமாத்தூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதியாகும். இக்கிராமத்தில், பொதுமக்கள் தங்களது சொந்த நிலங்களில் விவசாயம் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தற்போது மேற்கண்ட நபர்கள் யாரும் கிராமத்தில் வசித்து வரவில்லை எனவும், அடிப்படை வசதிகள் இக்கிராமத்தில் இல்லை என செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விளக்கம்
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கொடுத்த விளக்கத்தில்...,” தொழில் மற்றும் வேலைகளுக்காக கிராமத்திலிருந்து அருகில் உள்ள நகராட்சி பகுதியான சிவகங்கை நகராட்சி பகுதிக்கு இடம்பெயர்வதற்கென அக்கிராமத்திலிருந்து சென்றுள்ளதாக, வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆகியவைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, தெரிய வந்துள்ளது. கிராமத்திற்கு கூடுதல் தேவைகள் இருப்பின், அவைகள் அனைத்தும் கோரிக்கையின் அடிப்படையில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும். எனவே, நாட்டாகுடி கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு, தங்களது தேவைகள் குறித்து எடுத்துரைத்து, அரசின் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம்" என தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலரின் 8 கோரிக்கை
இந்நிலையில் நாட்டாகுடி கிராமத்திற்கு மீண்டும் பழையபடி மக்கள் வசிக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என சமூக ஆர்வலர் புத்தகக் கடை முருகன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்..,”
1) மாவட்ட நிர்வாகம் பாரபட்சமின்றி வயல்காடுகளில் மண்டியுள்ள வேலிக்கருவைகளை முழுவதுமாக அகற்றி, வாய்க்கால்களை முழுவதுமாக தூர்வாரி விவசாயத்திற்கு வித்திட வேண்டும்.
2) குடிமராமரத்து பணியில் ஆழமாக மண் எடுக்கப்பட்டதால் கண்மாயில் தண்ணீர் நிரம்பினாலும் மடை ஓடாது, மடைகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். அதே போல் தவறாக கட்டப்பட்ட கலுங்கையும் சரி செய்ய வேண்டும்.
3) அதிகாரிகள் வரும் பொழுது தண்ணீர் வந்தது போல், குறைந்த பட்சம் இரண்டு நாளுக்கு ஒரு முறையாவது தண்ணீர் வர வேண்டும்.
4) மீள் குடியேற்றத்தில் வந்த மக்களுக்கு கடன் திட்டத்தின் மூலமாக ஆடு, மாடு, கோழி வழங்கி அவர்களின் பொருளாதத்தில் மேம்பட வழி செய்ய வேண்டும்.
5) இரவு நேர போலீஸ் ரோந்து கிராமங்களுக்கு சென்று வர வேண்டும்.
6) வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு நேரடியாக சென்று ஆலோசனை வழங்கி, அரசின் திட்டங்கள் அனைத்தும் உடனடியாக விவசாயிகளுக்கு கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.
7) மின்சாரம் வேலாங்குளம் என்ற கிராமத்தில் இருந்து தான் வருகிறது. சிறிது பழுது என்றால் கூட 5 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள வேலாங்குளம் கிராமம் சென்று சரி செய்ய வேண்டியுள்ளது. அதை மாற்றி இலந்தங்குடி - நாட்டாகுடி கிராமத்திற்கென தனி டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்.
8) தினமும் ஏதாவது ஒரு பேருந்து குறைந்தபட்சம் ஒரு நேரத்துக்காவது வந்து செல்லும் வசதி செய்ய வேண்டும்.
இவை தான் உடனடியாக அந்த கிராமத்திற்கு செய்ய வேண்டியது. இவைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செய்தால் மக்கள் மீள் குடியேற்றம் நடைபெற்று மீண்டும் கிராமம் செழிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
கிரிக்கெட்
தொழில்நுட்பம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement






















