Sabarimala Temple: சபரிமலை கோயில் காணிக்கை தங்கத்தை முதலீடாக மாற்ற நீதிமன்றம் அனுமதி
கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலான குருவாயூர் தேவசம்போர்டு இந்த திட்டத்தில் ஏற்கனவே 869 கிலோ தங்கத்தை முதலீடு செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பிரிசித்திபெற்ற கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சீசன் நேரங்களில் மட்டுமல்லாம பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கியதையொட்டி லட்சக்கணக்கிலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அப்படி வருகை தரும் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக பல்வேறு பொருட்களை காணிக்கை செலுத்துகின்றனர். அதில் தங்கமும் உட்பட தற்போது காணிக்கையாக கிடைத்துள்ள 227 கிலோ தங்கத்தை முதலீடாக மாற்றுவதற்கு சபரிமலை தேவசம்போர்டு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ளதை தொடர்ந்து இந்தக் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கிலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஐயப்பனை தரிசிப்பதற்காக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என ஒரு மண்டலம் எனும் 48 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடித்து, இருமுடி கட்டி சபரிமலை சன்னிதானத்துக்கு வருவது வழக்கம். மகரவிளக்கு, மண்டலகால பூஜை சீசன் சபரிமலையில் தொடங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பக்தர்கள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் பம்பை வழிப்பாதை மற்றும் பெருவழிப் பாதையை தேர்ந்தெடுப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வது வழக்கம். மகரவிளக்கு, மண்டலபூஜை சீசன்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய கார்த்திகை மாதம் முதல் நாளில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர். பக்தர்கள் கோயிலில் காணிக்கையாக தங்க நகைகள், தங்கத்தினாலான பொருள்கள், வெள்ளிப் பொருள்கள், பணம், நாணயங்கள் என கோடிக் கணக்கில் செலுத்துவது வழக்கம். சபரிமலைக்கு செல்வதற்கு 3 பாதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் பெரும்பாலும் பம்பையில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் மலையேறி ஐயப்பனை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது பாரம்பரிய பாதையாகும். பெருவழிப் பாதை மிகவும் கடினமானது. ஆனாலும், பல பக்தர்கள் கடும் சிரத்தையுடன் பெருவழியாகச் சென்று வருகின்றனர். இதுதவிர இடுக்கி மாவட்டம், சத்திரம், புல்மேடு வழியாகவும் செல்லலாம். இந்தப் பாதை மிகவும் எளிமையானதாகும். அதுமட்டுமல்லாமல் நேரடியாக ஐயப்பன் சன்னிதானத்திற்கே இவ்வழியாகச் செல்ல முடியும். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் தங்கம், வெள்ளி உள்ளிட்டவை கோயிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை முதலீடாக மாற்றுவதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கேரள உயர் நீதிமன்றத்தில் அதற்கான மனுவை தாக்கல் செய்ததாகவும் இதனை ஏற்ற நீதிபதிகள் 227 கிலோ தங்கத்தை முதலீடாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர். மேலும், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியால் செயல்படுத்தப்பட்டு வரும் தங்க முதலீடு திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்றும், அதிலிருந்து கிடைக்கும் வட்டியை தனிக் கணக்கில் சேமிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலான குருவாயூர் தேவசம்போர்டு இந்த திட்டத்தில் ஏற்கனவே 869 கிலோ தங்கத்தை முதலீடு செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் இந்த முதலீட்டிற்காக 13 கோடியே 56 லட்சம் ரூபாயை வட்டி வருவாயாக பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.