(Source: ECI/ABP News/ABP Majha)
Kodaikanal: கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல அதிரடியாக உயர்த்தப்பட்ட கட்டணம்.. வாடகை வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சி!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பேரிஜம் செல்வதற்கு ஆகஸ்ட் 2 முதல் கட்டணத்தை வனத்துறை உயர்த்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றாக உள்ளது . இங்கு பெரும்பாலான சுற்றுலா இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வருகிறது . வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் அதிகமாக சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர். குணா குகை ,தூண்பாறை, பைன் மர காடுகள் , மோயர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களை கண்டு ரசிப்பது வழக்கம். இந்த நிலையில் வனத்துறையிடம் சிறப்பு அனுமதி வாங்கி செல்லும் பகுதிகளில் ஒன்றாக பேரிஜம் ஏரி இருந்து வருகிறது . இங்கு செல்வதற்கு வனத்துறையின் மூலம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு சிறப்பு அனுமதி வாங்கி செல்ல வேண்டும்.
சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல பயணிகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் போது கட்டணம் உயர்த்துவதற்கு உள்ளூர் வாடகை வாகன ஓட்டுநர்கள் வாடகை வாகன உரிமையாளர்கள் ஆகியோர்களை அழைத்து கட்டணங்களை உயர்த்தும் போது வனத்துறையினர் ஆலோசனை நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பேரிஜம் செல்வதற்கு ஆகஸ்ட் 2 முதல் கட்டணத்தை வனத்துறை உயர்த்தியுள்ளது.
இதனால் பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் வெளியூரிலிருந்து வரும் வாடகைக்கு வாகன ஓட்டுநர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே பெட்ரோல் டீசல் உயர்த்தினால் தங்களது வாடகை கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும், இதே போல் வனத்துறை சுற்றுலா தங்களிலும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாக்கப்படுவதாக வாகன ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சுற்றுலா பயணிகளிடமும் சுற்றுலா வாகன கட்டணம் உயர்த்தினால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து விடும் எனவும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கார்களுக்கு 300 ரூபாயாகவும், வேன்களுக்கு 600 ரூபாயாகவும் உயர்த்தி உள்ளதை மறு பரிசீலனை செய்து முன்பு போல கார்களுக்கு 200, வேன்களுக்கு 300 ரூபாய் என நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது .