குடும்பத்தில் அடுத்தடுத்த உயிரிழப்புகள்; துரத்திய வறுமை - துக்கம் தாளாமல் தந்தை, மகன் தற்கொலை
’’தனது 2 மனைவிகளையும் இழந்து, தற்போது மகனின் அறுவை சிகிச்சைக்கும் பணம் இல்லாததால் லோகநாதன் மிகவும் மனமுடைந்து இருந்துள்ளார்'’
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள முசாபர் கனி தெருவில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஜோதிடரான இவருக்கு வெங்கடேஷ், நிவாஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் லோகநாதனின் முதல் மனைவி பவானி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், இரண்டாவதாக கல்பனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து கல்பனாவும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். எனவே லோகநாதன் தனது மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.
இதனைதொடர்ந்து லோகநாதனின் மூத்த மகன் வெங்கடேஷ் திருமணம் முடிந்து தற்போது ஆறு மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வெங்கடேஷ் உள்ள நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதும், அறுவை சிகிச்சை செய்வதற்கு 18 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வெங்கடேஷின் குடும்பத்தினர் அறுவை சிகிச்சைக்கு தேவையான தொகையை திரட்டி வருகின்றனர். இதற்கிடையே தனது 2 மனைவிகளையும் இழந்து, தற்போது மகனின் அறுவை சிகிச்சைக்கும் பணம் இல்லாததால் லோகநாதன் மிகவும் மனமுடைந்து இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று லோகநாதன் வீட்டு கதவு நீண்ட நேரம் பூட்டியே இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது லோகநாதன் மற்றும் அவரது 2வது மகன் நிவாஸ் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்துள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பரமக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் லோகநாதன் மற்றும் நிவாஸ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரது வீட்டில் விஷமும் இருந்துள்ளது. அதையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை-மகன் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்வில் தொடர்ந்து வந்த சோதனை, கழுத்தை நெறிக்கும் கஷ்ட சூழ்நிலை, இவையெல்லாம் சேர்ந்து அவரை தற்கொலைக்கு தூண்டிய நிலையில், நான் இறந்துவிட்டால் தனக்குப் பிறகு மன மளர்ச்சி குன்றிய தனது மகனை பார்த்துக்கொள்ள இந்த உலகில் யாரும் இல்லை. எனவே அவனை அனாதையாக விட்டுச் செல்ல கூடாது என்ற எண்ணத்தில் தன் மகனுக்கும் விஷம் கொடுத்து அதன்பிறகு தூக்கிட செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட அந்த தந்தையின் கடைசி நிமிடங்களை நினைக்கயில் கல்மனமும் கசியும்.