ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
நாள்பட்ட காய்ச்சல் இருந்து பூச்சி கடித்ததற்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் தெரிவித்து உரிய சிகிச்சை பெற்று உயிர் இழப்பை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் அறிவுரை.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் மணிகண்டன். இவருடைய மூத்த மகள் பாரதி பிரியா (வயது 23) தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் தொடர் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. முதலில் சாதாரண காய்ச்சல் என்று தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று காய்ச்சல் குறையாத நிலையில் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்பொழுது டைபாய்டு காய்ச்சல் அல்லது டெங்கு காய்ச்சலா என கண்டுபிடிப்பதற்கே மருத்துவர்கள் முடியாத நிலையில் அந்தப் பெண்ணிற்கு இதயத்துடிப்பு அதிகரிக்கப்பட்டு மயக்க நிலைக்கு சென்ற நிலையில் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தனர்.
ஸ்கிராப் டைப்ஸ்:
அப்பொழுது தனியார் மருத்துவமனையில் செவிலியர்கள் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடலில் பூச்சிக்கடி தடம் இருப்பதை கண்டுபிடித்த பின்பு அதற்கான ஆய்வை மேற்கொண்ட பொழுது ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த ஸ்கிராப் டைப்ஸ் எனப்படும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வகை பூச்சி கடித்து அதனால் காய்ச்சல் ஏற்பட்டு உடல் உறுப்புக்கள் செயல் இழக்க செய்து வருகிறது என மருத்துவர்கள் கண்டுபிடித்த பின்பு 11 நாட்கள் பெண் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது உடல்நலம் தேறி மருத்துவமனையில் இருந்து 20 நாட்களுக்குப் பின்பு வீடு திரும்பி உள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மணிகண்டன் கூறுகையில் தொடர் காய்ச்சல் இருந்ததால் இது என்ன காய்ச்சல் என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் மருத்துவர்களுக்கு பெரிய சவாலாக இருந்ததாகவும் பல லட்ச ரூபாய் செலவு செய்து தனியார் மருத்துவமனையில் அதற்கான சிகிச்சை பெற்று தற்பொழுது தனது மகளின் உயிரைக் காப்பாற்றி உள்ளதாகவும், இதற்கு தமிழ்நாடு மருத்துவத்துறை மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியும், அரசு மருத்துவமனைகளில் இது போன்ற ஒட்டுண்ணி பூச்சி கடித்து காய்ச்சல் ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமான ஆய்வகங்கள் மற்றும் சிகிச்சை முறைக்கு தயார் நிலைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
மருத்துவர்கள் எச்சரிக்கை:
மேலும் ஸ்கிராப் டைப்ஸ் எனப்படும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வகை ஒட்டுண்ணி பூச்சி கடித்தால் அந்த இடத்தில் கருப்பு நிற புல்லியும் அதனைச் சுற்றி சிவப்பு நிறத்திலும் படர்ந்து இருக்கும். இதனால் முதலில் சாதாரண காய்ச்சல் போல் ஏற்பட்டு உடல் அசதி மற்றும் தலைவலி உள்ளிட்டவைகளுடன் காய்ச்சல் விடாத நிலை ஏற்படும் எனவும், காய்ச்சல் பாதிப்பு உண்டாகி ஐந்து நாட்களுக்கு மேல் சென்றவுடன் இதயத்துடிப்பு அதிகரித்து மூச்சுத் திணறல் ஏற்படும் அதன் பின்பு உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிப்படைந்து செயல் இலக்கச் செய்து உயிர் இழப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்ததோடு, சாதாரணமாக பூச்சி கடித்ததாக எண்ணி இருந்துவிடாமல் காய்ச்சல் ஏற்பட்டால் இது போன்ற பூச்சிக்கடி அடையாளங்கள் இருக்கின்றதா என உடல் முழுவதும் ஆய்வு செய்து உடனடியாக மருத்துவர்கள் அணுகி அதற்கான சிகிச்சை பெற்றால் உயிரிழப்பை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.