மேலும் அறிய
Advertisement
பஞ்சர் ஒட்டும் பாதிப்பணம் திருக்குறளாகிறது ; நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் குறள் விரும்பி..!
திருக்குறளை பின்பற்றினால் காவல்நிலையம், நீதிமன்றங்களுக்கு வேலையில்லை. திருக்குறளைப் பரப்பும் பஞ்சர்கடைக்காரர் செய்யும் நெகிழ்ச்சி.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கண்ணமங்கலம் அருகே சவேரியார்புரம் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர் எஸ்.முத்தையா (46). பஞ்சர் தொழில் செய்துவரும் இவர் வேலை நிமித்தம் காரணமாக கல்லல் பகுதியில் வசித்து வருகிறார். பஞ்சர் ஒட்டும் தொழில் செய்யும் இவருக்கு திருக்குறளைப் பரப்புவது கொள்ள பிரியம். விவசாயக் குடும்பத்தில் பிறந்த முத்தையா பிளஸ்-2 வரை படித்துள்ளார். சிறுவயதிலேயே திருக்குறள் மீது ஏற்பட்ட ஆர்வம் தற்போது பொருள் விளங்க கற்று, அதன்படி அவரை வாழ வழிவகை செய்துள்ளது.
வள்ளுவரின் 'பொதுமறை' நூலின் மூலம் குற்றங்களை முழுமையாக குறைக்க முடியும் என்கிறார் முத்தையா. ஆரம்பத்தில் பஸ் சர்வீஸில் வேலை செய்த முத்தையா பஞ்சர் ஒட்டும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு கல்லல் பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். தன் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் குறளை நேசிப்பதில் ஆர்வம் செலுத்துகிறார். தான் கற்ற திருக்குறளை பிறரும் முன்னெடுத்து சமூக ஆரோக்கியத்தைப் பேண வேண்டும் என பரந்த நோக்கத்தோடு திருக்குறளை பரப்பிவருகிறார். தனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்களை வழங்கி வருகிறார்.
கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட திருக்குறள் புத்தகங்களை தன் சொந்தப் பணத்தில் இருந்து வழங்கியுள்ளார். இதன் மூலம் 7க்கும் மேற்பட்ட பள்ளிகள் பயன்பெற்றுள்ளன. திருக்குறளைப் படித்தால் மட்டும் போதாது அதனை உணர்ந்து அதன்படி வாழவேண்டும் என வலியுறுத்துகிறார். ஜீவ காருண்யத்தை முன்னெடுக்கும் திருக்குறளின் படி புலால் உண்ணாமையை கடைபிடிக்கிறார். சிறிய எறும்பிற்கும் தீங்கு செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். திருக்குறள் மீது ஏற்பட்ட அளப்பரிய காதலால், சமூகத்திற்கு திருக்குறளை பரப்ப முயற்சி எடுத்து வருகிறார். திருக்குறளை படித்துவிட்டால் கொலை, கொள்ளை, திருட்டு, உள்ளிட்ட குற்றங்கள் குறைந்து அன்பு, நேசம், கருணை, நேர்மை ஏற்படும். இதனை பெரும்பாலானோர் கடைபிடித்தால் காவல்நிலையங்களுக்கோ, நீதிமன்றங்களுக்கோ வேலை இருக்காது என்கிறார்.
திருக்குறளை சரியாகச் சொல்லும் மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார். அனைவரும் கற்க வேண்டும் என அரசுப் பள்ளி சார்ந்த மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்குகிறார். இவரது செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிகிறது. பஞ்சர் ஒட்டும் கைகள் 'தமிழ் மறையை' தூக்கிப் பிடிக்கிறது. அதன் நீதி அவரை கிளர்ச்சியடையச் செய்து அறத்தை பரப்பச் செய்கிறது. முத்தையா போன்ற மனிதர்கள் ஆச்சிரியத்தின் அச்சாணிகள்.
பள்ளியில் புத்தகம் வழங்கிக் கொண்டிருந்த முத்தையாவை மதியவேளையில் சந்தித்தோம்..," அப்பா, அம்மா விவசாயக் கூலிகள். சாப்பாடு செஞ்சு போட்டதே குதிரைக் கொம்பு. அந்த சமயத்திலும் என்னை பிளஸ் டூ வரை படிக்க வச்சாங்க. கொடிநாளுக்கு காலனா கூட கடன் வாங்கி கொடுத்துருக்காங்க. வாட்டிய வறுமையால், படிப்பை கல்லூரிவரை தொடரமுடியவில்லை. பிளஸ்-2 முடித்ததும் காரைக்குடியில் பஸ் சர்வீஸ் ஒன்றில் பணிக்குச் சேர்ந்தேன் ஐந்து வருடம் கடந்து தனியாக பஞ்சர் கடை ஆரம்பித்தேன். 2002-ம் ஆண்டு ஆரம்பித்த கடையில் டூவிலர் முதல் லாரி, ஜே.சி.பி.,வரை பஞ்சர் ஒட்டி வருகிறேன். ரூ.500 முதல் 2 ஆயிரம் வரை நாள் ஒன்றுக்கு சராசரி வருமானம் கிடைக்கும். எனக்கு கெட்ட பழக்கங்கள் இல்லை என்பதால் கூடுதலாக பணம் தேவைப்படவில்லை. அதே சமயம் என் மனைவி தையல் தொழில் செய்து சுயமாக பணம் ஈட்டுகிறார்.
என் மூத்த மகள் விவசாயம் தொடர்பான பட்டப்படிப்பு படிக்கிறார், இரண்டாவது மகள் பிளஸ்-2 படிக்கிறார். இந்தச் சூழலிலும் தொழில் செய்துவரும் எனக்கு திருக்குறள் மீது ஆர்வம் அதிகம். பள்ளிக் கூடம் படிக்கும் போதே திருக்குறள் தொடர்பான போட்டிகளில் பரிசு பெற்றுள்ளேன். முனுசாமி அவர்கள் திருக்குறள் பற்றி சொல்லிய பதஉரை மிகவும் பிடிக்கும். இப்படி எனக்குள் ஏற்பட்ட மாற்றம் திருக்குறளின் மீது மிகப்பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. திருக்குறள் சொல்லும் ஒவ்வொரு குறளையும் உணர்ந்து படிக்கிறேன். அதன்படி வாழவும் முயற்சி எடுக்குறேன். திருக்குறள் ஏற்படுத்திய மாற்றம் எல்லோரிடமும் ஏற்பட வேண்டும் என விரும்புகிறேன். அதனை பள்ளி மாணவர்களிடம் இருந்து எழுப்ப வேண்டும் என இலவசமாக புத்தகங்கள் வழங்கி வருகிறேன். என்னால் முடிந்தவரை திருக்குறளைக் கொண்டு சேர்ப்பேன்" என்றார்.
தொடர்ந்து புலவர் கா.காளிராசா நம்மிடம்..," திருக்குறள் பரப்புவதன் மூலம் முகநூல் வழியாக முத்தையா அவர்கள் குறித்து தெரிந்துகொண்டேன். எளிமையான பஞ்சர் கடை நடத்தும் அவர், திருக்குறள் மீது கொண்ட ஆர்வத்தை கண்டு அசந்து போனேன். அதனால் கடந்து சில வருடங்களுக்கு முன் காளையார்கோயிலில் நாங்கள் நடத்தும் திருக்குறள் வகுப்பில் முற்றோதல் விழாவில் பெருமை செய்யும் வகையில் அறிமுகம் செய்தேன். முத்தையா பொதுநலத்தோடு சிந்தித்து திருக்குறளை பரப்பி சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பணி செய்துவருகிறார். சமூகத்தை சீர் செய்ய விரும்பும் முத்தையா போன்ற ஆட்களை தமிழ்ச்சமூகம் பாராட்ட வேண்டும்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion