Palani Temple Income : பழனி முருகன் கோயிலில் ரூபாய் 2.5 கோடி உண்டியல் வருவாய்
உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூபாய் 2.5 கோடி கிடைத்துள்ளது.
பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். அவ்வாறு பழனிக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த மாதம் 27ஆம் தேதி பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று (வியாழக்கிழமை) பழனி முருகன் கோவில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். மதுரை துணை ஆணையர் பொன் சுவாமிநாதன், பழனி கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார், தான்தோன்றிமலை கோவில் உதவி ஆணையர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இந்த உண்டியல் காணிக்கை மூலம் 2 கோடியே 61 லட்சத்து 95 ஆயிரத்து 700 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 221 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கம் மற்றும் வெள்ளியாலான வேல், சங்கிலி, மோதிரம், பாதம், மயில், தொட்டில் உள்ளிட்ட பொருட்களும் போடப்பட்டிருந்தது. அதன்படி தங்கம் 871 கிராம், வெள்ளி 27 கிலோ (27,030 கிராம்) காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்