அழிவின் விளிம்பில் உள்ளதா பாறு கழுகுகள்..? வனத்துறை கணக்கெடுப்பில் அதிர்ச்சி...
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் பாறு கழுகுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத் துறை கணக்கெடுப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாறு கழுகுகள் எனப்படும் பிணந்தின்னி கழுகுகள், இறந்த விலங்குகளைத் தின்று காட்டிலுள்ள விலங்குகளையும், நம்மையும் காத்து வருகின்றன. இந்தியாவில் பல்வேறு காரணங்களால் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
1990-களில் தென்னிந்தியாவில் பரவலாக காணப்பட்ட பாறு கழுகுகள், தற்போது தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும், கேரளாவின் வயநாட்டிலும், வடக்கு கர்நாடகாவின் ஒரு சில பகுதிகளிலும் மட்டுமே காணப்படுகின்றன. குறிப்பாக அரசு மற்றும் தனியார் பறவை நல அமைப்புகளும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவில் ஒவ்வோர் ஆண்டும் கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு காலங்களில் கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடந்ததால், கழுகுகள் எண்ணிக்கையை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கழுகுகள் குறித்து தோராயமான மதிப்பீடுகள் மட்டுமே உள்ளன,
இந்த நிலையில் ,தமிழகம், கர்நாடகா, கேரளாவில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக வனத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இயற்கை விவசாயம் மற்றும் கிராமப்புற சூழல்களில் பாறு கழுகுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, கரிமக் கழிவுகளை மறுசுழற்சி மூலம் அகற்றுவதில் அவை துப்புரவாளர்களாக செயல்படுகின்றன.
வெண்முதுகு பாரூ கழுகு, நீண்ட மூக்கு பாறு கழுகு மற்றும் செம்முக பாறு கழுகு ஆகியவற்றின் எண்ணிக்கை கடந்த 30 வருடங்களில் குறைந்து காணப்பட்டதால், அவை அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பாறு கழுகுகளைப் பாதுகாப்பதற்காக டைக்ளோஃபெனாக் மற்றும் நிம்சுலைடு ஆகிய கால்நடை மருந்துகளை தடை செய்தது மட்டுமின்றி, வாழ்விடங்களைப் பாதுகாத்தல் மற்றும் வருடாந்திர பாறு கழுகளின் எண்ணிக்கையை கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பாறு கழுகுகள் கணக்கெடுப்பு தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பை தமிழக வனத் துறை முன்னெடுத்து, கேரளா மற்றும் கர்நாடகா வனத் துறையுடன் ஒருங்கிணைந்து இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள், நெல்லை வன உயிரின சரணாலயம், கேரளாவில் வயநாடு வன விலங்கு சரணாலயம் மற்றும் கர்நாடகாவில் பந்திப்பூர், பிலிகிரி ரங்கசாமி கோயில் மற்றும் நாகர்ஹோலே புலிகள் காப்பகங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. காட்சி கோண எண்ணிக்கை முறையில் 3 மாநிலங்களிலும் 106 இடங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் 33 இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இக்கணக்கெடுப்பின் தரவுகளை ஆய்வு செய்ததில், 390 பாறு கழுகுகள் உள்ளதாக மதிப்பிட்டுள்ளது. 2023-24-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 320 பாறு கழுகுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 157 கழுகுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக வெண்முதுகு பாறு கழுகு 110, நீண்ட மூக்கு பாறு கழுகு 31, செம்முக பாறு கழுகு 11 மற்றும் எகிப்தியன் பாறு கழுகு 5 எண்ணிக்கை உள்ளன.
இந்தக் கழுகுகளின் இனப் பெருக்கத்துக்கு முக்கியமான இடமாக முதுமலை புலிகள் காப்பகம் திகழ்கிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் 8 இடங்களில் 60 கூடுகள் செயலில் உள்ளன. அதில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை 120-ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கையை, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் க.பொன்முடி நேற்று வெளியிட்டார். நிகழ்வில், துறைச் செயலர் சுப்ரியா சாஹு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்கள் ஸ்ரீநிவாஸ் ஆர்.ரெட்டி, ராகேஷ்குமார் டோக்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

