Kavach: மதுரையை கண்டுகொள்ள மத்திய அரசு - ”எங்க உயிர் முக்கியம் இல்லையா?” அச்சத்தில் மக்கள்
Madurai Kavach Trains: மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் விபத்துகளை தவிர்க்க உதவும் கவாச் தொழில்நுட்பம் பொருத்தப்படாதது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Madurai Kavach Trains: மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் விரைந்து கவாச் தொழில்நுட்பத்தை பொருத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கவாச் தொழில்நுட்பம்:
பாதுகாப்பான மற்றும் திறமையான ரயில் பயணங்களுக்கான தேடலில், இந்திய ரயில்வே, ரயில் இயக்கங்களுக்கு மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்களை உறுதி செய்யும் வகையில், உறுதியான பாதுகாப்பை வழங்குவதற்காக, அதிநவீன தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP) அமைப்பான கவாச்சை அறிமுகப்படுத்தியுள்ளது.
ATP என்பது ஒரு ரயில் பாதுகாப்பு அமைப்பாகும். இது ரயிலின் வேகம் சென்சார் அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இருப்பதை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரயிலின் வேகத்தை தொடர்ந்து கண்காணித்து, அனுமதிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாடுகளுடன் தானாகவே இணங்குவதைச் செயல்படுத்துகிறது. ஒருவேளை ரயில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறினால் அல்லது குறிப்பிட்ட சென்சார் அம்சங்களுக்கு பதிலளிக்கத் தவறினால், கவாச் உடனடியாக அவசரகால பிரேக்குகளை இயக்கி ரயிலை நிறுத்துகிறது.
தொடரும் ரயில் விபத்துகள்:
பலவேறு நடவடிக்கைக்களுக்குப் பிறகும், ரயில் விபத்துகள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணமே உள்ளன. கேட்டால் விபத்து ஏற்பட்ட ரயில்களில் கவாச் தொழில்நுட்பம் பொருத்தப்படவில்லை என்ற பதில்கள் தொடர்ந்து வந்தபடி உள்ளன. உதாரணமாக ஒடிசா ரயில் விபத்தையும் கூறலாம். இதனால், அனைத்து பயணிகள் ரயில்களிலும் கவாச் தொழில்நுட்பத்தை விரைந்து பொருத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மதுரையை கண்டுகொள்ளாத மத்திய அரசு
தமிழ்நாடு மற்றும் கேரளா முழுவதும் 2,216 கி.மீ தண்டவாளங்களில் கவாச் அமைப்பு படிப்படியாக நிறுவப்படும் என்று கடந்த ஆண்டு தெற்கு ரயில்வே கூறியிருந்தது. இருப்பினும், மதுரை கோட்டத்தில் உள்ள பல ரயில்களில் இது இன்னும் வழங்கப்படவில்லை என்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனியார் செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு தான், இதுதொடர்பான பதில்கள் கிடைத்துள்ளன. மற்ற ரயில்வே கோட்டங்களுக்கும் வழங்கப்படும் முக்கியத்துவம் மதுரை கோட்டத்திற்கு வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மும்பையில் விரைவில் கவாச் 5.0 தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருந்தார். ஆனால், மதுரையில் இன்னும் கவாச் 1.0 கூட அறிமுகப்படுத்தவில்லை என, அப்பகுதியை சேர்ந்த முன்னாள் ரயில்வே ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மதுரையில் ரயில் விபத்துகள்:
மதுரையில் கடந்த 2019ம் ஆண்டு இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதவிருந்த விபத்து, நூலிழையில் தவறியதால் நூற்றுக்கணக்கான பயணிகள் உயிர் தப்பினர். மனித தவறுகள் தவிர்க்கமுடியாதது என்பதால், பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதில் பல இரட்டை இருப்பு பாதைகள் இருந்தாலும் தற்போதும் அது ஒற்றை இருப்பு பாதையாகவே பின்பற்றப்படுகிறது. குறிப்பாக மதுரை-ராமேஸ்வரம், மதுரை-போடி, திருச்செந்தூர்-திருநெல்வேலி, திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம், செங்கோட்டை-விருதுநகர், திண்டுக்கல்-பழனி-பொள்ளாச்சி-கோவை, மற்றும் மானாமதுரை-திருச்சி போன்ற வழிப்பாதைகள் ஒற்றைவரிப் பிரிவுகளாகவே இன்னும் உள்ளன. இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, மற்ற பணிகளுக்கு நிதி வழங்குவது போல, மதுரை கோட்டத்திற்கும் ரயில்வே நிதி வழங்க வேண்டும். அதில் இருந்து நிதியை ஒதுக்கி மதுரை கோட்டமே, கவாச் தொழில்நுட்பத்தை ரயில்களில் பொருத்தலாம் என அப்பகுதியை சேர்ந்த முன்னாள் ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.





















