(Source: ECI/ABP News/ABP Majha)
”கீழடி உலக வரைபடத்தில் ஒரு மாற்ற முடியாத இடமாக இருக்கும்” - நர்த்தகி நட்ராஜ் !
"இது வரை 20 % அகழாய்வே நடந்துள்ளது. இன்னும் 30 சதவீதம் கண்டறியப்பட வேண்டி உள்ளது" என்றார்.
கீழடி' என்கிற ஒற்றைச் சொல், தமிழ்நாட்டு மக்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்டு வரும் கீழடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு இந்த ஆய்வைத் தொடங்கியது.
கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது. தற்போது கீழடியில் தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பாக 7-ஆம் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. கீழடி, கொந்தகை அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டது. தற்போது மணலூரில் அதிகளவு தொல்லியல் பொருட்கள் கிடைக்கவில்லை என அங்கு மட்டும் ஆய்வு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி துவங்கிய தொல்லியல் ஆய்வு அக்டோபர் மாதத்தை கடந்து அகழாய்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கீழடியில் அதிகளவு நீர் நிலை அமைப்பு இருந்தற்கான சான்றுகள் கிடைத்து வருகிறது. கொந்தகையில் முதுமக்கள் தாழிகளுடன் கூடிய எலும்புகள் கிடைத்து வருகின்றன. அகரம் பகுதியில் சுடுமண்ணால் தயார் செய்யப்பட்ட முத்திரை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அமைச்சார் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். தொடர்ச்சியாக அகரத்தில் அணிகலன்கள் கிடைத்துவருவது குறிப்பிடதக்கது. இந்நிலையில் நேற்று மாநில வார்ச்சி கொள்கைக் குழு உறுப்பினரும். பிரபல பரத நாட்டியக் கலைஞருமான ‘பத்மஸ்ரீ ‘நர்த்தகி நட்ராஜ் கீழடிக்கு வந்தார். அவர் பார்வையிட்ட பிறகு, கீழடிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் முன்னிலையில் பரத நாட்டியம் ஆடி, முகபாவனைகள் மூலம் கீழடியின் பெருமைகளை அழகாக விளக்கினார். இதை சுற்றுலாபயணிகள் வியந்து பார்த்தனர்.
தொடர்ந்து அவர் செய்தியாளர் களிடம் பேசுகையில்...,” கீழடி மனிதனின்' வரலாற்றையும், நாகரிகத்தையும் மாற்றி எழுதப் போகிறது. இது தமிழனின் பெருமையை வெளியில் எடுத்கூறும். உலக வரைபடத்தில் கீழடி ஒரு மாற்ற முடியாத இடமாக இருக்கும். நான் தொடர்ந்து அனைத்துக் கட்ட அகழாய்வு பணிகளையும் பார்வையிட்டு வருகிறேன். இது வரை 20 % அகழாய்வே நடந்துள்ளது. இன்னும் 30 % கண்டறியப்பட வேண்டி உள்ளது என்றார்.
கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவுபெற உள்ள நிலையில் நர்த்தகி நட்ராஜ் பார்வையிட்டது தொல்லியல் ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !