Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் 19 மீனவ கிராமத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.

‘டிட்வா’ புயல் Ditwah Cyclone:
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவாகியது. இந்த புயல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடற்கரை வழியாக வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நாளை (30.11.2025) அதிகாலையில், வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், காவிரிப்படுகை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
டிட்வா புயல் கரையை நோக்கி நகரும் வேகம் சற்று அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 400 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ. தொலைவிலும் டிட்வா புயல் உள்ளது. டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயல், நாளை அதிகாலையில் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும்.
டிட்வா புயலால் தற்போது இலங்கை முழுவதும் அதி கனமழை பெய்து வரும் நிலையில், புயல் தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் இங்கும் மழை அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்த புயல் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 14 மாவட்டங்ளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘டிட்வா’ புயல் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. புயலானது சென்னை, புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நாளை 30.11.2025 கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த கனமழை பெய்து வருகிறது, விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம்,கோலியனூர், விக்கிரவாண்டி, மயிலம், திண்டிவனம், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் வாகன இயக்குவதில் சிரமத்திற்கு உள்ளாகினர். அதிகாலையிலிருந்தே மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தவாறே முகப்பு விளக்குகளை எறியவிட்டப்படி செல்கின்றனர். இதனால் மக்களின் இயல்பு வழக்கை முடங்கியுள்ளது.
கடல் சீற்றம்- கடலுக்கு செல்லாத மீனவர்கள் !
கடலில் மாறுபட்ட நீரோட்டம் ஏற்பட்டு கடல் அலைகளின் சீற்றமும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள 19 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. கடல் அலைகளின் சீற்றம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருவதால் மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.
விமான சேவை ரத்து
புயல் காரணமாக, தூத்துக்குடியில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல் சென்னையிலும் 54 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.





















