கம்பத்தில் மைக் செட் உரிமையாளர்களின் இசைப் போட்டி: பழைய பாடல்களின் ஒலி அதிர்வுகள் ரசிகர்களை கவர்ந்தன!
ஒலிபெருக்கிகள் வரிசையாக கட்டப்பட்டு அந்த ஒலிபெருக்கிகளில் இருந்து துல்லியமாகவும் தெளிவாகவும் அதிக சத்தத்துடன் கூடிய பாடல் ஒலிக்கின்றதோ அதனை சிறந்த ஒலி பெருக்கியாக தேர்வு செய்யப்படும்.
கம்பத்தில் நடைபெற்ற 12 ம் ஆண்டு மைக் செட் உரிமையாளர்களுக்கான இசைப்போட்டி நடைபெற்றது. ஏராளமான ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்த்தும் பாடல்களை கேட்டும் ரசித்து சென்றனர். ஒவ்வொரு துறைகளிலும் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும் விதமாக துறை சார்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளை வழங்கி வருகின்றார்கள்.
இதைபோன்று மைக் செட் உரிமையாளர்கள் தங்களது மைக் செட்டின் தனி திறன்களை வெளிக்காட்டும் விதமாக இசை போட்டிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பத்தில் உத்தமபுரம் ஒலி பெருக்கியாளர்கள் சார்பில் 12 ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் இசைப்போட்டியை நேற்றும், இன்றும் நடத்தினார்கள். கம்பம் மெட்டு மலை அடிவாரப் பகுதியில் திறந்தவெளியில் நடந்த இந்த போட்டியில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட மைக் செட் உரிமையாளர்கள் தங்களின் மைக்செட் உபகரணங்களுடன் வந்து கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் பழங்காலத்து கிராமபோன் இசை தட்டுகள் மற்றும் கூம்பு வடிவ குழாய்கள் வைத்து ஒலிபெருக்கி குழாய்களை தூரத்தில் வரிசையாக கட்டி வைத்து பழங்கால கிராம் போன் மூலம் அந்த ஒலிபெருக்கிகளில் இருந்து துல்லியமாகவும் தெளிவாகவும் அதிக சத்தத்துடன் கூடிய பாடலை ஒலிபரப்பு செய்தனர்.
அதில் சிறந்த ஒலி பெருக்கியாக தெளிவாக வரும் பாடல் ஒலிகளை தேர்வு செய்தனர். இந்த ஒலிபெருக்கி இசை போட்டியில் முற்றிலுமாக பழைய பாடல்கள் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த இசை போட்டியில் வெற்றி பெற்ற ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு ரொக்க தொகையினை பரிசாக வழங்கினார்கள்.
மேலும் இந்த போட்டியின் போது மைக் செட் உரிமையாளர்கள் கூறுகையில், பொதுமக்கள் மத்தியில் மைக் செட் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வண்ணமாக நலவாரியம் அமைத்து தர வேண்டும் மேலும் கோவில் திருவிழாக்கள் மற்ற திருவிழாக்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு அரசு அனுமதி தர வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். இந்த போட்டியினை கம்பம் மற்றும் தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து இசை ரசிகர்கள் வந்து ஆரவாரம் செய்து போட்டியினை ரசித்தனர்.





















