MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MGNREGA Scheme: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பிற்கு மாற்றாக கொண்டு வரப்படும், திட்டத்தில் மாநில அரசின் நிதிப் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா..
நாட்டின் முதன்மையான வேலைவய்ப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மாற்றாக வளர்ந்த - வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா மிஷன் எனும் சட்டத்தை கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக VB - G RAM G BILL, 2025 எனும் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
புதிய மசோதா சொல்வது என்ன?
புதிய சட்டமானது, "2047 ஆம் ஆண்டு வளர்ந்த பாரதம் என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த கிராமப்புற மேம்பாட்டு கட்டமைப்பை நிறுவும், ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊதியத்துடன் கூடிய நூற்று இருபத்தைந்து நாட்கள் வேலைவாய்ப்பை சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கும். பொதுப்பணிகள் மூலம் அதிகாரமளித்தல், வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் செறிவூட்டல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இது வளர்ந்த பாரதத்திற்கான தேசிய கிராமப்புற உள்கட்டமைப்பு அடுக்கை உருவாக்கும். நீர் தொடர்பான பணிகள், முக்கிய கிராமப்புற உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளைத் தணிப்பதற்கான சிறப்புப் பணிகள் மூலம் நீர் பாதுகாப்பில் கருப்பொருள் கவனம் செலுத்தும்" என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி சுமை:
தற்போதைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்திற்கான நிதியில், மத்திய அரசு 100% பங்களிப்பினை வழங்கி வருகிறது. ஆனால் புதிய VB - G RAM G மசோதாவானது மாநில அரசுகள் நிதிப்பகிர்வை வழங்க வழிவகை செய்கிறது. மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகவே இந்த திட்டம் செயல்படுத்தப்படும் அதே வேளையில், வடகிழக்கு மாநிலங்கள், இமயமலை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் (உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர்) ஆகியவற்றிற்கு மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான நிதிப் பகிர்வு முறை 90:10 ஆகவும், சட்டமன்றம் கொண்ட மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 60:40 ஆகவும் இருக்கும் என கூறப்படுகிறது.
வேலையின்மைக்கு உதவித்தொகை
விவசாயப் பருவங்களின் உச்சத்தில் விவசாயத் தொழிலாளர்கள் போதுமான அளவு கிடைப்பதை எளிதாக்கும் வகையில், குறிப்பிட்ட பருவங்களில் இந்தச் சட்டத்தின் கீழ் எந்த வேலையும் தொடங்கப்படவோ அல்லது செயல்படுத்தப்படவோ கூடாது என்று மசோதா வலியுறுத்துகிறதாம். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு கோரி விண்ணப்பம் செய்த ஒருவருக்கு 15 நாட்களுக்குள் வேலைவாய்ப்பு வழங்கப்படாவிட்டால், இந்தப் பிரிவின் விதியின்படி அவருக்கு தினசரி வேலையின்மை உதவித்தொகை கிடைக்கும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
மத்திய அரசின் உத்தரவாதக் குழு
புதிய திட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மத்திய கிராம வேலைவாய்ப்பு உத்தரவாதக் குழுவால் நிர்வகிக்கப்படும். முன்னதாக, MGNREGA எந்த சிறப்பு கவுன்சில் அல்லது அமைப்பும் இல்லாமல் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நேரடியாகக் கையாளப்பட்டு வருகிறது. மாநில அளவில் இந்தச் சட்டத்தின் விதிகளை செயல்படுத்துவதைத் தொடர்ந்து கண்காணித்து மறுஆய்வு செய்யும் நோக்கங்களுக்காக, மாநில அளவிலான கவுன்சில் அமைக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். விரைவில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





















