Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
TN Government Free Laptop Scheme: மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்துக்குள் மடிக்கணினி வழங்கப்படும்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்துக்குள் மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது பெரும் வரவேற்பை அளித்தது. எனினும் இந்தத் திட்டம், திமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்டது பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியது.
தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட தரத்தில் கணினி மாணவர்களுக்கும் டேப் (TAB) ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது. இந்த நிலையில் மாணவர்களுக்கு லேப்டாப் எனப்படும் மடிக்கணினி மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே அண்மையில் திருச்சி மாவட்டம், டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள முடுக்குப்பட்டி பகுதியில், திமுக சார்பில் ''என் வாக்குச்சாவடி, என் உரிமை'' பிரச்சாரம் தொடங்கியது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
தேர்தலுக்காக நலத் திட்டங்களா?
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’’மகளிர் உரிமைத் தொகை பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்துக்குள் மடிக்கணினி வழங்கப்படும். இதற்கான டெண்டர் கோரப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
தேர்தலுக்காக திட்டங்களை செயல்படுத்தவில்லை, திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டம்
இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறையில் திமுக அளித்த பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி, ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






















