BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த பிளான் போட்டு செயல்பட்டு வரும் பாஜக, பியூஸ் கோயல் தலைமையில் 3 மத்திய அமைச்சர்களை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து அதிரடியாக களம் இறங்கியுள்ளது.

தமிழகத்தை குறிவைத்த பாஜக
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. தொகுதி நிலவரம் தொடர்பாக நிர்வாகிகளிடமும், தனியார் நிறுவனங்கள் மூலம் ரகசியமாகவும் சர்வே எடுத்துள்ள கட்சிகள், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அடுத்தாக அதிமுக, காங்கிரஸ், பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு தாக்கல் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு விருப்ப மனுவை பெற்று வருகிறது. இந்த நிலையில் பீகாரில் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற பாஜக அடுத்து தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் தான் தங்களது அடுத்த இலக்கு என வெளிப்படையாக தெரிவித்திருந்தது.
பாஜகவின் தேர்தல் திட்டம்
அந்த வகையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா தமிழகத்தை குறிவைத்து பல திட்டங்களையும், காய்களையும் நகர்த்தி வருகிறார். மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி உடன்பாட்டை முடித்தவர், அடுத்ததாக தங்களது கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்க திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் விரைவில் உடன்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனிடையே நாளை தமிழகம் வரும் அமித்ஷா தேர்தல் ஏற்பாடுகள், ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த வியூகத்தை வகுக்கவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக தேர்தல் பொறுப்பாளராக 3 மத்திய அமைச்சர்கள்
இந்த நிலையில் பாஜக சார்பில் தமிழக தேர்தல் பொறுப்புகளை கவனிக்கும் வகையில் தமிழக தேர்தல் பொறுப்பாளர்களாக 3 மத்திய அமைச்சர்களை பாஜக தலைமை நியமித்துள்ளது. அதில் தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இணை பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மொஹோல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் உத்திகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், அமைப்பு ரீதியான பணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதே அவரது முக்கிய பணியாகும்.
யார் இந்த பியூஸ் கோயல்
இதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஏற்கனவே தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு தனது பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்து அதிமுக-பாஜக கூட்டணி உடன்பாடு ஏற்பட முக்கிய காரணமாக இருந்துள்ளார். அந்த வகையிலேயே மீண்டும் பியூஸ் கோயல் தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





















