"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நமக்கு கல்வி கொடுத்தது கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் - கடலூர் எம்எல்ஏ ஐயப்பன்

”கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன், என் மனைவியின் பெயர்.... நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம்” என்று கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழாவில் சிறுபான்மையினர் வாக்குகளுக்காக பேசிய கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன்.
கடலூரில் திருச்சபைகள் ஒருங்கிணைந்த கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி, கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் சிறப்பு உரையாற்றினார். இந்த கீத ஆராதனை நிகழ்ச்சியில் கடலூரில் உள்ள பல்வேறு திருச்சபைகள், மற்றும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவ மாணவிகள் இயேசுவின் பிறப்பை மகிமைப்படுத்தும் விதமாக பாடல் பாடியும் நடனமாடியும் வெளிப்படுத்தினர். இதன் முக்கிய நிகழ்வாக கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக அருள்தந்தையர்கள், கேக் வெட்டி கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், “கிறிஸ்தவம் என்றால் புனிதம், எல்லோரும் ஒற்றுமையாக இங்கு வந்திருக்கிறீர்கள். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நமக்கு கல்வி கொடுத்தது கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள். என் பெயர் ஐயப்பன் மட்டும்தான் உங்களுக்கு தெரியும் என் மனைவியின் பெயர்.... நானும் என் மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டோம்” என பேசினார்.
இந்த கீத ஆராதனை நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள. புகழேந்தி, கடலூர் மாமன்ற உறுப்பினர் கிரேசி மற்றும் பேராயர் பீட்டர் பால் தாமஸ், அகஸ்டின் பிரபாகரன் மற்றும் திருச்சபைகளை சார்ந்த பங்கு தந்தைகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.





















