முல்லைப் பெரியாறு அணை: இன்று ஆய்வு மேற்கொண்ட துணைக் குழு! நீர்மட்டம், நீர்வரத்து குறித்த முக்கிய தகவல்கள்!
தமிழக கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. கேரள மாநிலம் தேக்கடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் உயரம் 152 அடி ஆகும். இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த அணையின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகிறது.
தமிழக,கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையிலான மேற்பார்வை குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த மேற்பார்வை குழுவிற்கு உதவியாக, துணைக் கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளனர்.
இந்த துணை குழுவில் அணைகள் பாதுகாப்பு ஆணைய தென் மண்டல இயக்குனர் கிரிதரன் தலைமையில் தமிழகம் சார்பாக பெரியாறு வைகை வடிநில கோட்டம் மதுரை கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு அணை சிறப்பு கோட்டம் கம்பம் செயற்பொறியாளர் செல்வம், கேரள மாநிலம் சார்பாக, இடுக்கி மாவட்ட நீர்ப்பாசன பிரிவு செயற்பொறியாளர் லிவின்ஸ் பாபு, நீர்ப்பாசன துணை பிரிவு குமுளி உதவி நிர்வாகப் பொறியாளர் கோஷி ஆகியோர் உள்ளனர். இந்த துனைக்குழுவினர் கடந்த செப்டம்பர் மாதம் 11-ல் அணையின் நீர்மட்டம் 133.80 அடியாக இருந்தபோது அணையில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் துணைக் குழுவினர் இன்று அணையின் நீர்மட்டம் 135.70 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து 449.44 கனஅடியாகவும், அணையிலிருந்துநீர் வெளியேற்றம் 1600 கனஅடியாகவும், மற்றும் அணையில் மொத்த நீர் இருப்பு 6042.40 மில்லியன் கனஅடியாகவும் உள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இன்று துணைக் கண்காணிப்பு குழு தலைவர் கிரிதரன் மற்றும் தமிழக அதிகாரிகள் தேக்கடி படகு துறையில் இருந்து தமிழக பொதுப்பணித்துறையினரின் படகில் அணைக்கு கிளம்பிச் சென்றனர்.
அங்கு கேரளா பிரதிநிதிகளுடன் சேர்ந்து, மெயின் அணை, பேபி அணை, மண் அணை(எர்த் டேம்), அணை நீர்வரத்து, நீர் கசிவு (சிப்பேஜ் வாட்டர்) மதகுகளின் இயக்கம் மற்றும்கேலரி பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து இன்று மாலை குமுளியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் இரு மாநில துணைக் குழுவினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஆய்வுப்பணிகள் குறித்த அறிக்கையினை மத்திய குழுவினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.





















