Mullai Periyar Dam: தொடர் கனமழையால் முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 6000 கன அடிக்கு மேல் அதிகரிப்பு. ஒரே நாளில் 2.25 அடி அணை நீர்மட்டம் உயர்ந்ததால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி.
தேனி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டம் உட்பட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப்பெரியாறு அணை. கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதே போன்று கேரளா மற்றும் முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை நேர நிலவரப்படி 121.05 அடியாக இருந்த பெரியாறு அணை நீர்மட்டம் இன்று காலை 123.30 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக ஒரே நாளில் 2.25 அடி அணையின் நீர்மட்டம் உயர்வு. அணைக்கு நீர்வரத்து 1308.06 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்றுகாலை 6264.31 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் இருப்புநீர் 2835.90 மி.கன அடியிலிருந்து 3281.40 மி.கன அடியாக அதிகரித்துள்ளது .
அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 1078 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி **1178** கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. தொடர்ந்து அணைபகுதியில் அதிக மழை கிடைத்தால் ஐந்து மாவட்ட குடிநீர் மற்றும் தேனி மாவட்டத்தில் விவசாயம் செழிப்பாக நடைபெற வாயப்பு உள்ளது. அணை பகுதியில் மழைஅளவு பெரியாறு 98.4 மி.மீ, தேக்கடி 63 மி.மீ, மழை பதிவாகி இருந்தது.