கொட்டித்தீர்க்கும் பருவ மழையால் இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சேதம்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அதிதீவிர மழைக்கான ' ரெட் அலர்ட்' இன்றும் (மே 31) தொடரும் என்பதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் விடுக்கப்பட்ட அதிதீவிர மழைக்கான ' ரெட் அலர்ட்' இன்றும் (மே 31) தொடரும் என்பதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். பகலில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் பாதிப்புகளும் தொடர்ந்தன. பல பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து வீடுகள் சேதமடைந்து போக்குவரத்து தடைபட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் 62 வீடுகள் சேதமடைந்தன. ஆறு நாட்களில் 112 வீடுகள் சேதமடைந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் மே 15 முதல் 28 வரை 285.13 ஹெக்டரில் 2520 விவசாயிகளின் 4.35 கோடி மதிப்பிலான விளை பொருட்கள் சேதமடைந்தன. ஏலம், மிளகு, ரப்பர், கொக்கோ, வாழை கூடுதலாக சேதமடைந்தன. அய்யப்பன்கோவில் ஊராட்சியில் ஹெவன்வாலி பகுதியில் கற்கள் உருண்டு இருதயராஜ் என்பவரின் வீடு சேதமடைந்தது. வீட்டில் இருந்த அவரது மகன், மருமகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். வண்டிபெரியாறு அருகே வாளார்டி எஸ்டேட்டில் மரம் சாய்ந்து தொழிலாளர்கள்' முத்துலெட்சுமி, மனோன்மணி வீடுகள் சேதமடைந்தன. அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு ஆட்டோக்களும் சேதமடைந்தன.
அடிமாலி- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கல்லார்குட்டி, கத்திபாறை பகுதிகளில் சென்ற கார் மீது மரம் முறிந்து விழுந்தது. காரை ஓட்டிய அடிமாலி பாதிரியார் ரெஜி பாலக்காடன் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சீயப்பாறை அருகே 6ம் மைல் பகுதியின் சாலையில் மரம் சாய்ந்து போக்குவரத்து தடைபட்டது. அடிமாலி தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மூணாறு அருகே மாட்டுபட்டி அணை பகுதியில் மரம் சாய்ந்து போக்குவரத்து தடைபட்டது. குண்டளை சான்டோஸ் காலனியில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது. வட்டவடையில் ஊராட்சி அலுவலகம் அருகே மண்சரிவு ஏற்பட்டதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்தனர்.கல்லார்குட்டி, மலங்கரா, பாம்ப்ளா ஆகிய அணைகள் திறக்கப்பட்ட நிலையில் பொன்முடி அணை திறக்கப்பட்டது.
அணையில் இருந்து மூன்று மதகுகள் வழியாக 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பன்னியாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. இடுக்கி அணையில் நீர்மட்டம் கடந்த இரு நாட்களில் 5.43 அடி உயர்ந்தது. 554 அடி உயரம் கொண்ட அணையில் நீர்மட்டம் 200. 21 அடியாக இருந்தது. இதே கால அளவில் கடந்தாண்டு நீர்மட்டம் 179.60 ஆக இருந்தது. தேவிகுளம் தாலுகாவில் 2, இடுக்கி தாலுகாவில் 3 என 5 நிவாரண முகாம்களில் 123 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இடுக்கிமாவட்டத்தில் 'ரெட் அலர்ட்' தொடர்வதால் தோட்டப் பணிகள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகள் ஆகியவற்றுக்கு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்தது. அதனால் தேயிலை, ஏலம் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாததால் தோட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. இம்மாவட்டத்தில் இன்று 8:00 மணியுடன் சராசரி மழை 96.52 மி.மீ., பதிவானது. அதிகபட்சமாக மூணாறில் 100.80 மி.மீ., மழை பெய்ததுள்ளது.





















