திருமங்கலம் திருமால் கிராமத்தில் உள்ள கல்குவாரியை அகற்ற கோரி கிராம மக்களுடன் சேர்ந்து ரேசன்கார்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம்.
லாரிகளில் கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரமான விவசாய நிலங்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இக்கிராமத்தில் கிரஷர் கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி பெற்று பணிகள் நடைபெற்று வருவதை ஒட்டி, நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உயிருக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது
அதனைத் தொடர்ந்து கல்குவாரி விதிமுறை மீறி வைத்துள்ளதாகவும், இதனால் கிராமத்தில் உள்ள வீடுகள் விரிசல் ஏற்படுகிறது எனவும், கல்குவாரியிலிருந்து வெளியேறும் மண் துகள்கள் மற்றும் தூசிகளால் வீடுகளில் முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் வருவதால், தங்களது உயிருக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது என்றும்,
ரேஷன் கார்டுகளை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில்
மேலும் விவசாய விளை நிலங்களும், மண் துகள்களால் அழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரமான விளை நிலங்களை பாதுகாக்கவும், விவசாயிகளின் உயிர் காக்கவும் இந்த கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி, 1000 க்கும் மேற்பட்டோர் திருமால் கிராமத்தினர் தங்களது ரேஷன் கார்டுகளை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஈடுபடுவதற்காக திரண்டு வந்தனர்.
கல்குவாரி தடை செய்ய வேண்டும் என்று கோஷம்
இதனைத் தொடர்ந்து பேருந்துகளை உள்ள விடாமல் போலீசார் தடுத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு இருந்து கடுமையான கோஷம் எழுப்பி நடந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினர் அனுமதிக்க மறுத்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் கொளுத்தும்வெயிலில் கல்குவாரி தடை செய்ய வேண்டும் என்று கோஷம் போட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வெயில் தாக்கம் அதிகமானதால் நான்கு பெண்கள் மயக்கமடைந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர், காவல் துறையினர் ஆர்.பி.உதயகுமாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது பொதுமக்கள் அனைவரையும் மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டபோது அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனை தொடர்ந்து ஆர்.பி. உதயகுமார் மற்றும் பெண்கள், விவசாயிகள் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
ஆர்.பி.உதயகுமார்
இதனைத் தொடர்ந்து ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது...,” மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருமால் கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைக்க அனுமதி அளித்துள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் விவசாயம் பெரிது பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்தி கனிம வளத்தை பாதுகாத்திட தேவை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து நான் ஏற்கனவே கடந்த 14ஆம் தேதி மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் அனுப்பினேன். அதனை தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதியும் கடிதம் அனுப்பினேன் ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து நான் போராடுவேன்
தற்போது பொதுமக்கள் 9 நாட்களாக போராடி வருகிறார்கள். ஆகவே கல்குவாரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இயற்கை வளங்கள் பாதுகாக்க வேண்டும், என்று பொதுமக்கள் இன்றைக்கு தங்களின் அடையாளங்களை ஒப்படைக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காமல் எங்களை கைது செய்துள்ளது. நிச்சயம் நான் மக்களுக்காக தொடர்ந்து நான் போராடுவேன்" எனக் கூறினார்.