மேலும் அறிய
சிவகங்கை தேவாலயம் ரூ1.55 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு.. பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு! !
தேவாலயத்தை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பணிகளை விரைவாகவும், சிறப்பான முறையிலும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இடைக்காட்டூர் சர்ச்
Source : whats app
தொன்மையான இருதய ஆண்டவர் தேவாலயத்தில் மொத்தம் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பார்வையிட்டு ஆய்வு.
இடைக்காட்டூர் சர்ச்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூர் கிராமத்திலுள்ள இருதய ஆண்டவர் தேவாலயமானது. 1866-ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அருட்தந்தை ஆர்.பி. பெரிடினாட் செல்ஸ் அவர்களால் கட்டப்பட்டது. சுமார் 159 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் திருநாளை அடுத்துவரும் ஞாயிற்றுக்கிழமை "இடைக்காட்டூர் பாஸ்கா" என்ற திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இத்திருவிழாவில் சிவகங்கை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள்.
பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தொன்மையான கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு நிதியுதவி அளித்து வருகிறது. அத்திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டம். இடைக்காட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள தொன்மையான இருதய ஆண்டவர் தேவாலயத்தில் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு மொத்தம் 1 கோடியே 55 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ள 77 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அருங்காட்சியகம் அமைத்தல், பழுதடைந்த நிறம் மாறிய ஜன்னல்கள் கண்ணாடிகளை சீர் செய்தல், தேவாலய நிகழ்வுகளை அனைவருக்கும் தெளிவாக கேட்கும் வகையில் ஒளி அமைப்பை சீர் செய்தல், பழுதான மின் சாதனங்களை மாற்றியமைத்தல், சேதம் அடைந்துள்ள பகுதியில் புதிய வண்ணம் பூசி பொலிவுறச் செய்தல், போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் பார்வை
இராமநாதபுரத்தில் நாளை நடைபெறவுள்ள அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர், இன்றையதினம் மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக இராமநாதபுரம் செல்லும் வழியில், சிவகங்கை மாவட்டத்தில் இடைக்காட்டூர் கிராமத்தில் உள்ள தொன்மையான திரு. இருதய ஆண்டவர் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பணிகளை விரைவாகவும், சிறப்பான முறையிலும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், தமிழரசி, காதர்பாட்சா முத்துராமலிங்கம், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் கா. பொற்கொடி, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, சிவகங்கை மறை மாவட்ட ஆயர் ஆனந்தம், இடைக்காட்டூர் திருத்தல பங்கு தந்தை ஜான் வசந்தகுமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















