மதுரையில் கஞ்சா போதையில் ரவுடிகள் அட்டகாசம்.. வாள், அரிவாளுடன் மிரட்டல் !
கஞ்சா போதையில் பொதுமக்களை மிரட்டிய மேலும் 5 நபர்களை அண்ணா நகர் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரையில் கஞ்சா போதையில் வாள், அரிவாளுடன் சென்று பொதுமக்களை மிரட்டி கார், பைக், கடைகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கஞ்சா போதையில் சென்ற 10 பேர் கொண்ட கும்பல்
மதுரை மாநகர் அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வண்டியூர், சௌராஷ்டிராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு கஞ்சா போதையில் சென்ற 10 பேர் கொண்ட கும்பல் கையில் வாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் சாலையில் சென்ற பொதுமக்களை ஆயுதங்களை காட்டி மிரட்டியதோடு சாலையோரம் நின்ற கார், பைக் வாகனங்களை கீழே தள்ளி உடைத்து வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அந்த பகுதியில் உள்ள கடைகளை அடைக்க சொல்லி கடைகளில் இருந்தவர்களை மிரட்டியும், அடித்தும் உடைத்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதையடுத்து சிறையில் அடைத்தனர்
இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமராவின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கஞ்சா போதையில் கடைகள், கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை உடைத்து நொறுக்கிவிட்டு தப்பியோடிய நபர்களான ஹம்சாத் ஹுசைன் (22), மருதுபாண்டி (24), லட்சுமணன் (22), அருண் (22), சந்தோஷ் ஆகிய 5 பேரையும் அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதையடுத்து சிறையில் அடைத்தனர். இதனிடையே கஞ்சா போதையில் பொதுமக்களை மிரட்டிய மேலும் 5 நபர்களை அண்ணா நகர் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கட்டுப்படுத்த வேண்டிய போதை கலாச்சாரம்
இதுகுறித்து சமூக ஆவர்கள் கூறுகையில்...” மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. காவல்துறையினர் தொடர்கண்காணிப்பில் இருந்தால் தான் சட்ட விரோத போதை கலாச்சாரத்தை ஒழிக்க முடியம். எனவே இதற்கு சிறப்பு குழு அமைத்து பல்வேறு பகுதிகளிலும் சோதனை செய்ய வேண்டும். தொடர் விசாரணையின் போது இதனை குறைக்கலாம்” என தெரிவித்தனர்.





















