Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 'பாரத் டாக்சி' செயலிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, அதனை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

'ஊபர், ஓலா, ராபிடோ' போன்ற பொது போக்குவரத்து சேவை நிறுவனங்களுக்கு போட்டியாக, மத்திய அரசு சமீபத்தில் 'பாரத் டாக்சி' செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தினசரி 45,000 புதிய பயனர்கள் செயலியில் பதிவு செய்து வருவதால், இந்த சேவையை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக ‘பாரத் டாக்சி‘ செயலி
ஊபர், ஓலா, ராபிடோ போன்ற தனியார் நிறுவனங்கள், நாடு முழுதும் கார் மற்றும் பைக் டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் பதிவு செய்து, ஓட்டுநர்கள் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதில், குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அந்த ஓட்டுநர்கள் கட்டாயமாக செலுத்த வேண்டும்.
இந்த நிலையில், இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக, மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில், 'பாரத் டாக்சி' என்ற செயலி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக, தலைநகர் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட இதை, பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தொடங்கி வைத்தார்.
‘பாரத் டாக்சி‘ செயலியின் சிறப்பு என்ன.?
ஊபர், ஓலா, ராபிடோ போன்ற சேவை நிறுவனங்களின் செயலிகளில் உள்ள அனைத்து அம்சங்களும், 'பாரத் டாக்சி' செயலியில் இடம் பெற்றுள்ளன. ஆனால், இதில் முக்கியமாக கமிஷன் வசூலிக்கப்படாது. அதனால், பயணிகள் செலுத்தும் முழு தொகையும், ஓட்டுநருக்கே கிடைத்துவிடும்.
‘பாரத் டாக்சி‘ செயலிக்கு அமோக வரவேற்பு
இந்நிலையில், சமூக வலைதளத்தில் மத்திய கூட்டுறவு அமைச்சகம் வெளியிட்ட பதிவில், 'பாரத் டாக்சி' செயலிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், தற்போது வரை, 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த செயலியில் பதிவு செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளது. மேலும், தினசரி 40,000 முதல் 45,000 புதிய பயனர்கள் செயலியில் பதிவு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அதோடு, ‘பாரத் டாக்சி‘ செயலி, 'கூகுள் பிளே ஸ்டோரில்' 9-வது இடத்திலும், 'ஆப்பிள் ஆப் ஸ்டோரில்' 13-வது இடத்திலும் முன்னணியில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டம்
இதனிடையே, விமான நிலையங்களில் ஊபர், ஓலா நிறுவனங்களைப் போல், பாரத் டாக்சிக்கும் பிரத்யேக பிக்-அப், டிராப் பாயின்ட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலு, ‘பாரத் டாக்சி‘ செயலிக்கு மக்களிடையே கிடைத்த சிறப்பான வரவேற்பு காரணமாக, வரும் நாட்களில், சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த, மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.





















