மதுரை ரயில் நிலையத்தில் மல்லிகைப் பூவைத் தொடர்ந்து குளு, குளு இளநீர் விற்பனை
மதுரை உள்ளிட்ட 5 ரயில் நிலையத்தில் இளநீர் விற்பனை செய்யப்பட்ட வருகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இளநீர் வெட்ட அரிவாள் பயன்படுத்த கூடாது, குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை இளநீர் விற்பனைக்கு ரயில்வே நிர்வாகம் கட்டளை விதித்துள்ளது.
'ஒரு நிலையம், ஒரு பொருள்'
பாரம்பரியமிக்க, பழமையான உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் 'ஒரு நிலையம், ஒரு பொருள்' திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை அமைக்க ரயில்வே துறை ஏற்பாடு செய்தது. இதன்படி நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான ரயில் நிலையங்களில் இந்த விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில், அந்தந்தப் பகுதிகளில் பிரபலமாக இருக்கும் பொருட்களை தேர்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காஞ்சி பட்டு புடவை, தஞ்சாவூரில் பொம்மைகள், திருவனந்தபுரத்தில் கைவினை பொருட்கள், திருசெந்தூர் ரயில் நிலையத்தில் பனை பொருட்கள், பழனி பஞ்சாமிர்தம், திருவில்லிபுத்தூர் பால்கோவா, மதுரையில் சுங்குடி சேலை, திருநெல்வேலியில் பனைப் பொருட்கள், உள்ளிட்ட பனைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உள்ளூர் பொருட்கள் விற்பனை
தற்போது மதுரை கோட்டத்தில் 35 ரயில் நிலையங்களில் 45க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனை நிலையங்களில் உள்ளூர் பயணிகள் மற்றும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி வந்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது. ரயிலில் பயணம் செய்யும் வெளியூர் பயணிகள் அந்தந்த ஊர் தயாரிப்புகளை எளிதில் வாங்கும் வகையில் நடைமேடைகளில் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய முயற்சியான தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தும் இரண்டாவது கோட்டம் மதுரை கோட்டமாகும். ஏற்கனவே மதுரையின் பிரபல பொருளான மல்லிகை மாலையாக, சரமாக மதுரை ரயில் நிலைய நடை மேடைகளில் தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை துவக்கப்பட்டது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தற்போது இளநீர் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.





















