சட்டத்தையும், பதவியையும் தவறாக பயன்படுத்துகிறார் - மதுரை போக்குவரத்து இயக்குனர் மீது ஊழியர்கள் புகார்
மதுரை போக்குவரத்து கழக இயக்குனர் பதவியை பயன்படுத்தி தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக ஊழியர்கள் குற்றச்சாட்டு.
மதுரை போக்குவரத்து கழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இயக்குனர் ஆறுமுகம் தொடர்ந்து சட்டத்துக்கு விரோதமாக அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இதுகுறித்து பாதிக்கப்பட்ட மதுரை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் கேட்ட போது, மதுரை போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற நாளிலிருந்தே இயக்குனர் ஆறுமுகம் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று தெரிவித்தனர். மேலும் அவருடைய ஆதரவாளர்களை மட்டுமே அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பணி நேரத்தை மாற்றி, பணிச்சுமை இல்லாமல் இருக்கும் வேலையை தருகிறார் என்று ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், அவருக்கு உடந்தையாக அங்கு இருக்கும் பொது மேலாளரும் அவருடன் இணைந்து அங்கு நிர்வகிக்கப்படும் ஒவ்வொரு பதவிக்கும் ஒரு தொகையை வாங்கிக் கொண்டு புதிய ஆட்களை தேர்வு செய்து அவர்களுக்கு பணியை வழங்கி வருகிறார்கள் என்றும் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அங்கு பல ஆண்டுகளாகப் பணிபுரியும் ஊழியர்கள் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இவருக்கு ஆதரவாக நடக்கவில்லை என்று கூறினாலோ அல்லது சரிவர வேலையை முடிக்க முடியாமல் போகும் போது, அதற்கான காரணத்தை தெரிவிக்கும் போது, உடனடியாக சஸ்பெண்ட் மற்றும் பணிமாறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்றும் அங்கு இருக்கும் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அருப்புக்கோட்டை பேருந்து பணிமனையில் பணிபுரியக்கூடிய ஊழியர் ஒருவர் பேசுகையில், கடந்த மாதம் இரவு நேரத்தில் பணியில் இருந்த போது பேருந்தில் ஒரு பை இருந்ததாகவும், அதனை அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று ஒப்படைத்து உரிய நபரிடம் சேர்க்கும்படி தெரிவித்த பிறகு உரிய நபருக்கு அந்த லேப்டாப் அடங்கிய பை ஒப்படைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், தனக்கு தகவல் தெரிவிக்காமல் நீ மட்டும் எவ்வாறு நல்ல பெயர் எடுக்கலாம் என்று கூறி உடனடியாக தன்னை சஸ்பென்ட் செய்ததாகவும் அவர் வேதனை தெரிவிக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, அருப்புக்கோட்டையில் இருந்து தனக்கு மதுரைக்கு பணிமாறுதல் ஆர்டர் வந்ததாகவும், ஆனால், மதுரை போக்குவரத்து கழகத்தில் பணி புரியக்கூடிய இயக்குனருக்கு ஒரு டிவிஷனில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாறுதல் வழங்கக் கூடிய அதிகாரம் இல்லை. ஆனால், அதை மீறி தொடர்ந்து நான்கு பேருக்கு ஒரு மாதத்தில் பணி மாறுதல் வழங்கியுள்ளார். இதனை எதிர்த்து கேட்டால் அவர்கள் மீது பொய்யான புகார் சுமத்தி அவர்களை ஆப்ஷன்ட் செய்து பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறார் என்றும் தெரிவித்தார். இது போன்ற சிறு சிறு விஷயங்களுக்கும் தங்கள் மீது பழியை சுமத்தி சஸ்பெண்ட் மற்றும் பணிமாறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவரும் மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதே நிலை நீடித்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் குடும்பத்துடன் தற்கொலை செய்யக் கூடிய சூழ்நிலைக்கு ஆளாவார்கள் என்று அங்கு இருக்கும் ஊழியர்கள் அனைவருமே தெரிவிக்கின்றனர். தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு நீதிமன்றத்தை அணுகி அந்த பணி மாறுதல் மற்றும் சஸ்பெண்ட் ஆர்டரை ரத்து செய்ததாகவும், மற்றவர்கள் தனது குடும்பம், வாழ்க்கை என்று நினைத்து பயந்து வேறுவழியின்றி பணியாற்றி வருவதாகவும் அந்த ஊழியர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, சிறு சிறு விஷயங்களுக்கு கூட ஊழியர்களை சஸ்பெண்ட் செய்கிறார் என்றும் தெரிவிக்கின்றனர். உதாரணமாக இயக்குனர் உணவு உண்ணும் டிபன் பாக்சை எடுத்து வெளியே வைத்ததற்காக ஒரு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், போக்குவரத்து துறையில் பிரச்சனை என்பதற்காக இயக்குனருக்கு ஒரு ஊழியர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டபோது அவரது தொலைபேசி வெயிட்டிங்கில் சென்றுள்ளதால், இரண்டு மூன்று முறை தொடர்பு கொண்டு பின்னர் அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்து விட்டார். ஆனால் தனக்கு வெயிட்டிங்கில் சென்றபோது நீ எவ்வாறு என்னை தொடர்பு கொண்டாய் என்று என்று கேட்டு, 15 நாட்கள் அந்த ஊழியரை சஸ்பெண்ட் செய்து விட்டார். இது ஒருபுறம் இருக்க, மதுரை கோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நேரத்திற்கு வரவில்லை என்றாலும், அவர் சொன்னதை செய்யவில்லை என்றாலும், தொடர்ந்து விடுமுறை அளித்து விடுகிறார். மேலும் பணிக்கு வந்தாலும் அதில் அட்டென்டன்ஸ் இல் கையெழுத்திட அனுமதி இல்லை என தெரிவிக்கிறார்.
உடனடியாக சஸ்பெண்ட் செய்து செய்துவிடுகிறார். இவ்வாறு பல்வேறு அராஜக போக்கில் ஈடுபட்டுள்ள அவர், தனது அதிகாரத்தையும் சட்டத்தையும் தவறாக பயன்படுத்திக் கொண்டு மற்ற ஊழியர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறார். எனவே இதனை மாநில அரசு கண்டுகொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம் என்று அவர் தெரிவிக்கிறார். மேலும் தங்களது வாழ்வில் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படுத்திட இந்த போக்குவரத்து துறையை காப்பாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்