Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகளவு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உதயநிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், திருவண்ணாமலையில் இன்று வடக்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,
மதம்பிடிச்ச யானை பாஜக:
பாஜக என்பது மதம்பிடிச்சு ஓடும் யானைனு நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த யானையை அடக்கும் அங்குசம் இங்கே உள்ள மு.க.ஸ்டாலினின் கையில் உள்ளது. இது மோடிக்கும், அமித்ஷாவிற்கும் தெரியும். இதனால், நேராக வந்தால் வெற்றி பெற முடியாது என்று பழைய அடிமைகளையும், புதிது, புதிதாக அடிமைகளை கூட்டிக் கொண்டு நம்முடன் மோத பார்க்கிறார்கள்.
பழைய அடிமைகள், புது அடிமைகள் என்று இல்லை. இன்று சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானத்துறை, தேர்தல் ஆணையம் என்று அனைவரிடமும் கூட்டு வைத்து பாசிச பாஜக இன்று தமிழ்நாட்டில் நுழைய பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட பாஜக-வை நம்பிதான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் களத்திற்கு வந்துள்ளார்.
எஞ்ஜினே இல்லாத கார் அதிமுக:
ஆனால், நாம் அப்படி இல்லை. கழக தொண்டர்களையும், தம்பிமார்களையும், மக்களை நம்பி வந்துள்ளோம். நாம் தமிழக மக்களுடன் தொடர்ந்து இருப்போம். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவோம் என்று அடிமைகள் தீர்மானம் போட்டுள்ளார்கள். காரில் எஞ்ஜினே இல்லாவிட்டால் எவ்வளவு தள்ளினாலும் ஸ்டார்ட் ஆகாது.
எஞ்ஜின் இல்லாத கார்தான் இன்றைய அதிமுக. பாஜக இல்லாத லாரி எஞ்ஜின் இல்லாத அந்த காரை இழுத்துக்கட்டப் பார்க்கிறது. எடப்பாடி பழனிசாமி இன்று நீதித்துறை, தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறார். முதலில் அவர் அதிமுக-வை பாஜக-விடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
அடிமை:
கட்சியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். யார் வேண்டுமானாலும் வாருங்கள், யார் வேண்டுமானாலும் போங்கள். நான் மட்டும்தான் இன்று நிரந்தர பொதுச்செயலாளர். இதுதான் அவருக்கு மட்டும் தேவை. நமக்கும் அதுதான் தேவை. எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன். அடிமையாக இருந்து சுகமாக வாழ்வதை காட்டிலும் சுயமரியாதையுடன் சுதந்திரமாக வாழ்வதே முக்கியம்.
எங்களுடைய லட்சக்கணக்கான திமுக தம்பிமார்கள் சுதந்திரமாக, சுயமரியாதையாக இருக்கிறோம். பாசிச சக்தியிடம் இருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றும் ஆற்றல் திமுக-விற்கு மட்டுமே இருக்கிறது என்று நம்புகிறார்கள். தலைவர் மீது மக்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைத்தான் அவர்களது கண்களுக்கு உறுத்துகிறது.
கலவரம் செய்ய முயற்சி:
இதனால்தான் அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டின் உள்ளே புகுந்து ஏதாவது கலவரத்தை செய்ய முயற்சிக்கிறார்கள். அந்த பாசிச சக்திக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நாங்கள் உங்களை தமிழ்நாட்டிற்குள் நிச்சயம் அனுமதிக்க மாட்டோம். அதனால் ஏற்படும் விளைவுகளை நாங்கள் எதிர்கொள்வோம்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு தாருங்கள்:
தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி சமூக நீதி, மதச்சார்பின்மையை காக்கும் ஆட்சி. இப்படிப்பட்ட கழக ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டியது நம் பொறுப்பு. வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய இளைஞர்களுக்கு போட்டியிட அதிகளவு வாய்ப்பைத் தர வேண்டும். இளைஞர்களுக்கு கொடுக்க வேண்டும். இளைஞரணிக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்.
நம் முன்பு இருக்கும் முக்கிய பணி 2026 சட்டமன்ற தேர்தல் பணி. அடுத்த தலைமுறை இளைஞர்களைச் சந்தித்துப் பேச வேண்டும். யார் வேண்டுமானாலும் வரலாம் போகலாம். அதைபற்றி கவலை வேண்டாம். வானவில் பார்க்க அழகாக இருக்கும். அதைப் பார்க்க மக்கள் கூடுவார்கள். அது நிரந்தரம் கிடையாது. உதயசூரியன்தான் நிரந்தரம். உங்கள் தெருவில் இருக்கும் இளைஞர்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள். 70 ஆயிரம் பூத்திலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.





















