Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
எதிரிகளின் தப்புக்கணக்கை சுக்கு நூறாக உடைக்கும் கொள்கை கூட்டம் இது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

திருவண்ணாமலையில் இன்று வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது,
சட்டமன்ற தேர்தல் வெற்றி:
"2 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞரணி மாநில மாநாட்டை சேலத்தில் வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். அந்த மாநாட்டின் வெற்றி அதன்பின்பு 2024 நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் அளித்தார்கள். இங்கு திரண்டுள்ள லட்சக்கணக்கான இளைஞரணி நிர்வாகிகளை பார்க்கும்போது வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இதே வெற்றியை நிச்சயம் நம் தலைவருக்கு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இன்று பல கட்சிகள் உறுப்பினர்கள் சேர்க்கவே தடுமாறிக் கொண்டிருக்கும்போது, நமது திமுக ஒவ்வொரு பூத் வரைக்கும் நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளோம். 91 சட்டமன்ற தொகுதிகள் மாவட்டம், மாநகரம், நகரம், ஒன்றியம், பாகம், பூத் வரை அமைப்பாளர், துணை அமைப்பாளர் என்று 1 லட்சத்து 30 ஆயிரம் நிர்வாகிகள் வரை இந்த கூட்டத்திற்கு வந்துள்ளீர்கள்.
கொள்கை வாரிசுகள்:
நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் கலைஞர். அவர் வழியில் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தலைவரான பிறகு வெற்றியை மட்டுமே தந்து கொண்டிருக்கக்கூடிய நம் தலைவர் பெருமையுடன் அமர்ந்துள்ளோம். சேலத்தில் நான் கழகத் தலைவராக மட்டுமில்லாமல், தந்தையாகவும் வாழ்த்துகிறேன் என்றார். உதயநிதி மட்டும் எனது வாரிசு இல்லை. இங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கொள்கை வாரிசு என்று பாராட்டினார். கொள்கை வாரிசுகளாக எழுச்சியுடன் கூடியுள்ளோம்.
இன்று மாநாடு என்றால் பல கட்சிகளில் ஆயிரக்கணக்கில் மட்டுமில்லாமல், நூற்றுக்கணக்கில் கூட இளைஞர்களை திரட்டுவது சாதாரண விஷயம் இல்லை. ஆனால், நம் கழகத்தில் இளைஞரணி நிர்வாகிகளையே ஒரு மாநாடு போல கூட்டியிருக்கிறோம். இந்தியாவிலே எந்த கட்சியும் செய்யாத சாதனையை செய்துள்ளோம்.
தப்புக்கணக்கு:
இது ஏதோ கணக்கு போடுவதற்காக கூடிய கூட்டம் இல்லை. நம் எதிரிகள் போடும் தப்புக்கணக்கை சுக்குநூறாக உடைக்கும் இளைஞரணி கூட்டம், கொள்கை கூட்டம். இளைஞர்கள் அதிகளவு கூடினால் அவர்களை கட்டுப்படுத்த இயலாது. காட்டாற்று வெள்ளம்போல இருப்பார்கள். யாருடைய கட்டுப்பாட்டிலும் இருக்கமாட்டார்கள் என்ற பிம்பம் இப்போது உள்ளது. ஆனால், நம் கழக இளைஞரணியினர் மிகுந்த கட்டுப்பாடு உள்ளவர்கள் என்பதற்கு இந்த கூட்டம் சாட்சி.
கட்டுப்பாடு இல்லாமல் ஒரு லட்சம் அல்ல, ஒரு கோடி கோடி இளைஞர்கள் திரண்டாலும் எந்த பயனும் இல்லை. அப்படி கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வைத்து யாராலும் சாதிக்க இயலாது. ஆனால், இந்த கொள்கை கூட்டம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய பலம்.
இவ்வாறு அவர் பேசினார்.





















