”வீட்டுக்கு பின்னாடி தோண்டத் தோண்ட தங்கம், வெள்ளி கிடைச்சுருக்கு” : சுதாரித்த மதுரைக்காரர்
வீடு கட்ட குழி தோண்டியபோது 3 கிலோ தங்கமும் வெள்ளியும் புதையல் கிடச்சுருக்கு யார்டயும் சொல்லிடாதங்க.. நூதன முறை மோசடியை தொடங்கிய கும்பல்.. ஓ.டி.பி மோசடி கும்பலின் புதிய புரட்டை நம்பி ஏமாந்துடாதீங்க..
வளர்ச்சியில் டிஜிட்டல்
இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் மேம்பட்ட நிலையில் அதன் மூலமாக நடைபெறும் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக செல்போன்களில் ஏ.டி.எம் கார்டு என ஓ.டி.பி எண்களை கேட்பது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறுவது, அதிர்ஷ்ட கூப்பன் என சொல்லி பேசுவது, என நாளுக்கு நாள் மோசடி கும்பல்களின் எண்ணிக்கைகள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் புதிய யுக்தியாக மோசடி கும்பல் ஒன்று சில செல்போன் எண்களை எடுத்து புதையல் கிடைத்துள்ளதாக கூறி, பணம் கேட்டு மோசடியில் ஈடுபடும் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
மோசடி செய்ய வலைவீச்சு
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சங்கரபாண்டி. இவரை, தொடர்புகொண்ட மோசடி கும்பல் அவரிடம் பேசத் தொடங்கியவுடன் “5 மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டிற்கு வந்தபொழுது உங்களிடம் என்னுடைய செல்போன் எண்ணை கொடுத்தேன். ஞாபகம் இருக்கிறதா?” என பாசமாக உருகி பேசியிருக்கின்றனர்.
மேலும் ”வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா? கர்நாடகாவில் எனக்குத் தெரிந்த தாத்தா பாட்டி ஒருவர் வீடு கட்டி வருகிறார்கள். அந்த வீடு கட்டும் பணியின்போது கிடைத்த புதையலில் வெள்ளி மற்றும் 3 கிலோ தங்கக் காசுகளும் கிடைத்துள்ளது. விலை உயர்ந்த அந்த பொருட்களை விற்று தருமாறு என்னிடம் கேட்டனர். அப்போது தமிழகத்தில் எனக்குத் தெரிந்த அண்ணன் இருக்கிறார். அவர் மூலமாக விற்று தருகிறேன் எனக் கூறி உங்களுக்கு போன் செய்துள்ளேன். நீங்கள் நேரடியாக வந்து அந்த தங்கத்தையும், வெள்ளியையும் வாங்கிக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட பணத்தை கொடுத்து வாங்கிவிட்டு நீங்கள் உண்மையான நகையா என டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு முழுமையாக வாங்கிக் கொள்ளலாம். தயவுசெய்து இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம்” எனவும் தட்டுத் தடுமாறி அரைகுறை தமிழில் மோசடி கும்பல் பேசியுள்ளது. அந்த மோசடி கும்பலானது எப்படியாவது ஏமாற்றி பணத்தை பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக ஆர்வலரிடம் பேசியதை புரிந்து கொண்ட சமூக ஆர்வலர் இன்னும் ஒரு மணி நேரத்தில் தங்களை தொடர்பு கொள்வதாக கூறி துண்டித்து விட்டார்.
மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து அந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது எந்தவித ரெஸ்பான்ஸும் இல்லை. செக் தி நம்பர் என்று சொல்லியுள்ளது.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
”இப்படியாக புதையல் எனக்கூறி புதிய வகையில் மோசடிகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளது, மோசடி கும்பல். எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். எனவும், இதுபோன்று தெரியாத நபர்களிடம் புதையல் என ஏதேனும் மோசடி தொலைபேசி அழைப்புகள் வந்தால் யாரும் நம்பி ஏமாந்து விட வேண்டாம் எனவும், இதுகுறித்து சைபர்கிரைம் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, இது போன்ற மோசடிகள் தொடங்குவதற்கு முன்பே தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என சமூக ஆர்வலர் சங்கர பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - நாய் கடித்த கறியை மீண்டும் கழுவி விற்பனை செய்த கடைக்காரர்; சிசிடிவி காட்சியால் சர்ச்சை