மேலும் அறிய
“காலில் விழக்கூடாது, உரிமையோடு கேளுங்கள்” - ஆட்சியரை பார்த்து நெகிழ்ந்த மதுரை மக்கள்
”மனுக்கள் என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, நடவடிக்கை எடுப்பதற்காக தான். உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்” - அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய மதுரை மாவட்ட ஆட்சியர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்
Source : whats app
குறைதீர் கூட்டங்களில் பெறப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த இரண்டு வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்.
மதுரையில் புதிய மாவட்ட ஆட்சியர்
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக பிரவீன் குமார் பொறுப்பேற்ற நிலையில், கடந்த இரண்டு வாரமாக குறைதீர் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் குறித்து குறைதீர் கூட்டத்திற்கு முன்பாக அனைத்துதுறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது ஒவ்வொரு அதிகாரிகளிடம் துறைவாரியாக எத்தனை மனுக்கள் நிலுவையில் உள்ளது, ஏற்கனவே கடந்த 2 குறைதீர் கூட்டங்களில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீதான நடவடிக்கை என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதிகாரிகள் திணறல்
அப்போது ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களில் வந்த மனுக்களின் எண்ணிக்கை குறித்து, அதிகாரிகளிடம் கேட்டார். ஆனால், முன்னுக்கு பின் பதிலே மிஞ்சியது. உடனே மாவட்ட ஆட்சித் தலைவர் இணையதளம் மூலமாக மனுக்களின் தன்மையை பார்வையிட்டார். பெறப்பட்ட மனுக்களின் மனுதாரர் பெயர், மனுக்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
ஆஜராக நேரிடும்
பின்னர் அதிகாரிகளிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார், குறைதீர் கூட்டம் என்பது மனுக்களை பெறுவதற்கான கூட்டம் அல்ல, பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை மதித்து அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முகாம் தான். எனவே ஒவ்வொரு மனுக்கள் மீதும் அடுத்த வாரத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த மனுவிற்கு தீர்வு கிடைக்க வேண்டும், என அறிவுறுத்தினார். மாவட்ட அளவில் அரசு அலுவலகங்களில் அரசு துறைகளில் உள்ள நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான கேள்வியை எழுப்பினார். அப்போது நீதிமன்ற அவமதிப்புக்கு உட்படக்கூடிய வழக்குகள் மீது அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். எனவும், தற்போதையுள்ள மனுதாரர்கள் அதிகாரிகளுடைய பெயர்களுடன் வழக்கு தாக்கல் செய்வதால், நீங்கள் எந்த இடத்திற்கு பணி மாறுதல் ஆனாலும் கூட இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராக நேரிடும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மேலும் ஒவ்வொரு அதிகாரிகளுக்கும், சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளிடம் தனி கவனத்துடன் கோரிக்கை மனுக்களை பெற்று அது குறித்து கேட்டறிந்தார். அப்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க முயலும்போது ”நீங்கள் எழுந்து நிற்கக்கூடாது” என கூறி. மாற்றத்திறனாளிகள் அருகில் நின்று கோரிக்கையை கேட்டறிந்தார். மேலும் மனுக்கள் குறித்து உடனடியாக அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளை வரவழைத்து அந்த பகுதியிலேயே தீர்வு காண வைத்தார். அப்போது மாற்றுத்திறனாளி ஒருவர் காலில் விழுந்த போது ”இப்படி காலில் விழுந்து எதையும் கேட்கக்கூடாது. உரிமையோடு கேளுங்கள், உங்களுடைய உரிமை” என பதில் கூறிய மாவட்ட ஆட்சியர் உடனடியாக அவர் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















