கொடைக்கானல்: சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், ஹோட்டல்களுக்கு செக்? நீதிமன்றம் போட்ட உத்தரவு
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, வனத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
கொடைக்கானல் குணா குகை
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மலையாள மொழியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க கூடிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் குணா குகையை மையமாக வைத்து எடுத்த படமாகும். குகையில் விழுந்த தன்னுடைய நண்பனை காப்பாற்றக்கூடிய காட்சிகளை சிறப்பாக காண்பித்து இருக்கக்கூடிய இத்திரைப்படம் குணா குகை மீண்டும் பிரபலமாக துவங்கி இருக்கிறது. இதனால் கூட்டம் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அனுமதியின்றி செயல்படும் வணிகவளாகங்கள், உணவகம், சாலையோர கடைகளை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு
சுற்றுலா மூலம் கொடைக்கானலுக்கு அதிகளவில் வருவாய் கிடைக்கிறது. ஆனால் கொடைக்கானலில் நகராட்சி அனுமதியின்றி பல்வேறு பகுதிகளில் அனுமதியற்ற கட்டிடங்கள், கடைகள், வணிக வளாகங்கள், சாலையோர கடைகள், உணவகங்கள் கட்டப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கொடைக்கானலில் அனுமதியின்றி சாலையோர கடைகள் மற்றும் உணவகங்கள் செயல்படுவதாலும், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல், சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. கொடைக்கானலின் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரும் பகுதிகளில் எந்தவொரு அனுமதியின்றி வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் கூட கடைகள் உணவங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் கொடைக்கானலில் புல்வெளி பகுதியில் இயற்கையான நீருற்று உருவாகி 5 கிலோமீட்டர் தூரம் கடந்து வெள்ளக்காவி கிராமத்திற்கு செல்கிறது. இதனைத்தான் மலைவாழ் மக்கள், பொதுமக்கள் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
வனத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு
ஆனால் அனுமதியற்ற கட்டிடங்கள், வணிகவளாகங்கள் மற்றும் கடைகளள், உணவகங்களால் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் கொடைக்கானலின் இயற்கை நீருற்றுகள் மாசடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே எந்த அனுமதியும் இல்லாமல் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் மற்றும் வணிகவளாகங்கள், கடைகள், உணவகங்கள் நடத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மின் இணைப்பை துண்டித்து, கடைகளை அப்புறப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, வனத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - BJP Candidates List: மக்களவைத் தேர்தலுக்கான பாஜக இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - EXCLUSIVE: மன்சூர் அலிகான் உடன் அமைக்கும் கூட்டணி தான் மெகா கூட்டணியா? - கே.சி. பழனிசாமி சாடல்