EXCLUSIVE: மன்சூர் அலிகான் உடன் அமைக்கும் கூட்டணி தான் மெகா கூட்டணியா? - கே.சி. பழனிசாமி சாடல்
தமிழ்நாட்டின் தேர்தல் களம் குறித்தும், அரசியல் சூழல்கள் குறித்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி ஏபிபி நாடுவிற்கு பிரத்யேக பேட்டியளித்தார்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டின் தேர்தல் களம் குறித்தும், அரசியல் சூழல்கள் குறித்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி ஏபிபி நாடுவிற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதனை பார்க்கலாம்.
கேள்வி : அதிமுகவினால் வலுவான கூட்டணியை அமைக்க முடியவில்லையா?
பதில் : ”ஆமாம். அதிமுகவினால் வலுவான கூட்டணியை அமைக்க முடியவில்லை. அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்திய பாமக, பாஜக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக சொல்கிறார்கள். தேமுதிக எந்தப் பக்கம் செல்வது என்ற யோசனையில் உள்ளது. அதிமுகவினர் இப்போது மன்சூர் அலிகான் கூட தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாமக்கலில் எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி அமைப்போம் என்றார். மன்சூர் அலிகான் உடன் அமைக்கும் கூட்டணியை தான் மெகா கூட்டணி என அவர் சொன்னாரா எனத் தெரியவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் கே.பி. முனுசாமி தான் தேமுதிகவை விரட்டி விட்டார். அவர் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை அனுப்பி எதுவும் விளங்கியதாக இல்லை”.
கேள்வி : தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வராமல் இருக்க என்ன காரணம்?
பதில் : ”மத்திய பாஜக அரசு தமிழக தேர்தல் களத்தை திமுக VS பாஜக என அமைக்க டிரெண்ட் அமைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி இல்லை. அண்ணா திமுக இன்று எதிமுகவாக, எடப்பாடி திமுகவாக உள்ளது. நாம் பலமாக இருந்தால் தான் பத்து பேர் நம்மை தேடி வருவார்கள். கட்சியில் இருப்பவர்களை ஒவ்வொருவராக வெளியே அனுப்பி விட்டால், யார் தேடி வருவார்கள்?”
கேள்வி : அதிமுகவின் இந்த நிலைக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?
பதில் : ”எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி, தங்கமணி இவர்கள் தான் காரணம். இவர்களின் சுயநலமும், கொள்ளையடிக்கும் நோக்கமும் தான் காரணம்”.
கேள்வி : எதிர்கட்சியாக உள்ள அதிமுக பலவீனமாக இருக்கிறது என சொல்ல முடியுமா?
பதில் : ”அதிமுகவிற்கு தொண்டர்கள் பலம் உள்ளது. ஆனால் தேர்தல் வியூகம் தான் முக்கியம். அது இவர்களிடம் சுத்தமாக இல்லை. அதில் கோட்டை விடுகிறார்கள். இரட்டை இலைக்கு இருக்கும் வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்”.
இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா?
கேள்வி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் யாருக்கு சாதகமாக இருக்கும்?
பதில் : ”தமிழக தேர்தல் களம் திமுக VS பாஜக என உருவாகிறது. கருத்துக் கணிப்புகள் எப்படி எனத் தெரியவில்லை. பார்ப்போம். அதேசமயம் இரட்டை இலைக்கு ஓட்டு உள்ளது. அதை அறுவடை செய்யும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை. தேர்தல் முடிவுகள் வந்தால் தான் யாருக்கு சாதகம் என்பது தெரியும். நான் அண்ணா திமுக ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறேன். அவ்வளவு தான்”.
கேள்வி : டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : ”பாமக, முக்குலத்தோர் முன்னேற்ற கழகம் போன்ற சாதிக்கட்சிகளை வைத்து பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தினகரன் அளித்த ஒரு பழைய பேட்டி உள்ளது. அதில் இந்த தினகரன் உயிரோடு இருக்கும் வரை பாஜக உடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று சொன்னார். அதை அவருக்கு போட்டுக்காட்டி இப்போது எங்கிருக்கிறார் என கேளுங்கள்”.
கேள்வி : இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு உள்ளதா?
பதில் : ”பாஜக என்ன சிக்கல்களை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார்கள்”.