Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
இந்திய சட்டத்தின்படி, லிவ்-இன் உறவுமுறை சட்டவிரோதமோ அல்லது குற்றச்செயலோ கிடையாது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில், லிவ்-இன் ஜோடி ஒன்று தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள உயர்நீதிமன்றம், இந்திய சட்டத்தின் கீழ், திருமண வயதை எட்டாவிட்டாலும், வயது வந்த ஆண் மற்றும் பெண், முழு சம்மதத்துடன் லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்வது சட்டவிரோதமோ அல்லது குற்றச் செயலோ கிடையாது என கூறியுள்ளது.
பெற்றோரை எதிர்த்து வழக்கு தொடர்ந்த லிவ்-இன் ஜோடி
ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவரும், 19 வயது இளைஞர் ஒருவரும் லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்காக, கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி ஒரு ஒப்பந்தத்திலும் அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களது பெற்றோர், இந்த உறவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், பல்வேறு மிரட்டல்களையும் அவர்கள் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, அந்த லிவ்-இன் ஜோடி அது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட இளைஞர் இன்னும் திருமண வயதான 21 வயதை எட்டவில்லை என்று கூறி, காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்துள்ளனர்.
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி எந்த தடையும் இல்லை“
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் தொடர்புடைய இளைஞர் சட்டப்பூர்வ திருமண வயதான 21 வயதை எட்டவில்லை என்பதால், சட்டப்படி அவர் திருமணம் செய்யவோ, அல்லது லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழவோ இயலாது என வாதிட்டுள்ளார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, 18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளார். 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எவரும் இந்தியச் சட்டத்தின் கீழ் வயது வந்தவர்களாக அங்கீகரிக்கப்படுவதாகவும், வயதுவந்தோர் என்பது, இணைந்து வாழும் முடிவு உட்பட தனிப்பட்ட தேர்வுகளைச் செய்யும் உரிமையைக் கொண்டுள்ளது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
மேலும், சட்டப்பூர்வ திருமண வயது என்பது ஒருவரின் தனியுரிமையை பறிக்காது என்றும், இந்தியாவில் லிவ்-இன் உறவுமுறை என்பது சட்டவிரோதமோ அல்லது குற்றச்செயலோ அல்ல என்றும் நீதிபதி கூறியுள்ளார். மேலும், வயது வந்தோரின் தனியுரிமை மற்றும் வாழ்வுரிமையை சட்டப்பிரிவு 21 பாதுகாக்கிறது என்றும், வாழும் இடத்தையும், வாழ்க்கை துணையையும் தேர்வு செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு எனவும் நீதிபதி அதிரடியாக கூறியுள்ளார்.
அதோடு, 18 வயதை கடந்த இருவர் சேர்ந்து வாழ முடிவெடுத்தால், அவர்களின் முடிவில் அரசு தலையிட முடியாது என்று திட்டவட்டமாக கூறிய நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மனுதாரர்களுக்கு ஆபத்து இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.





















