முறையற்ற கட்டிடங்கள்; சென்னையை போல் மதுரை மாறிவிடக்கூடாது - நீதிபதிகள்
அனுமதியற்ற கட்டுமானங்களால் நிம்மதியற்ற வாழ்க்கையை மக்கள் வாழ நேரிடுகிறது. இதையெல்லாம் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கலாம் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது- நீதிபதிகள்
முறையற்ற கட்டிடங்களால் தற்போதைய சென்னையின் நிலை போல் மதுரையின் நிலைமையும் மாறிவிடக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அனுமதியற்ற கட்டுமானங்கள் மேற்கொள்வோர் மீது கிரிமினல் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு துனை போகும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த மதன் குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை மாநகராட்சி விளாங்குடியில் சட்ட விரோதமாக இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்ட விரோதமாக இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 5 வருடங்களாக ஆகியும் மதுரை மாநகராட்சி தரப்பில் தற்போது வரை பதில் மனு தாக்கல் செய்யாததால் மதுரை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்ச்மி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் நேரில் ஆஜராகினார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் தரப்பில், உரிய அனுமதி இல்லாத கட்டுமானங்கள் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், மதுரையின் பல்வேறு பகுதிகளில் அனுமதியற்ற கட்டுமானங்கள் கட்டப்படுவதை அதிகாரிகள் ஆய்வு செய்வதே இல்லை. மதுரை மாநகரம் அனுமதியில்லாத கட்டிடங்களின் காடாக மாறி வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே பெங்களூர், சென்னை நகரங்கள் இதுபோன்ற சட்டவிரோத கட்டுமானங்களால் பாழாய் போய்விட்டது. அந்த வரிசையில் மதுரையும் மாறி வருவது வேதனை அளிக்கிறது. தற்போதைய சென்னையின் நிலைமையை போல் மதுரையின் நிலைமையும் மாறிவிடக்கூடாது. அனுமதியற்ற கட்டுமானங்கள் மேற்கொள்வோர் மீது கிரிமினல் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுங்கள். அப்போது தான் ஏழை மக்களையும், உரிய விதிகளை பின்பற்றுவோரையும் பாதுகாக்க முடியும். சட்டவிரோத கட்டுமான விவகாரத்தில் மாநகராட்சியுடன், காவல்துறை இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும்.
வெறும் அபராதம் விதிப்பதோடு அதிகாரிகள் விட்டுவிடக்கூடாது. உரிய அனுமதியில்லாமல் கட்டுமான பணிகளை தொடர்ந்தால் கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். அனுமதியற்ற கட்டுமானங்களால் நிம்மதியற்ற வாழ்க்கையை மக்கள் வாழ நேரிடுகிறது. இதையெல்லாம் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கலாம். நீதிமன்றம் தலையிடாமல் இருக்க முடியாது. மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் தினந்தோறும் ஆய்வு செய்து அனுமதியற்ற கட்டுமானங்களை கண்டறிந்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளை தமிழ் நாடு அரசு ஊரக ஊராட்சி, நகராட்சி அனைத்து நகர்ப்புற அமைப்புகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.