வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் பெண்கள் கல்வி இல்லாததால், பிழைப்பிற்காக பொம்மைகள் செய்வதற்கும், அரிவாள் செய்வதற்கும், ஈயம் பூசுவதற்கும் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

தரங்கம்பாடி, மயிலாடுதுறை: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும், பெண்கள் கல்வியில் தமிழ்நாடு முதலிடம் என்ற இலக்கை எட்டி சாதனை படைத்திருப்பதாகவும், இதற்கான தளத்தை அமைத்துக் கொடுத்ததில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் பங்கு மகத்தானது என்றும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துகொண்டு, இளங்கலை மற்றும் முதுகலை முடித்த 168 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி வாழ்த்திப் பேசினார்.
பிழைப்பு தேடி வரும் அண்டை மாநில இளம் பெண்கள்
விழாவில் உரையாற்றிய அமைச்சர் கோவி.செழியன், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி குறித்து உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். "என்னுடைய தாத்தா பாட்டி கைநாட்டெழுத்து போடுவார்கள். என்னுடைய அப்பா அம்மா கிறுக்கி கிறுக்கி கையெழுத்து போடுவார்கள். ஆனால், ஓலைக் குடிசையில் விவசாயி மகனாகப் பிறந்து முதல் பட்டதாரி முனைவர் என்ற பட்டத்தைப் பெற்று ஆங்கிலத்தில் கையெழுத்து போடுகிறேன் என்று சொன்னால், அதற்கு திராவிட இயக்கமும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டின் உயர்கல்விக்கும் பெண்களின் கல்விக்கும் அயராது உழைத்ததனால் தான் நாம் இந்த நிலையை எட்டி இருக்கிறோம்."
மேலும், வட மாநிலங்களில் நிலவும் கல்வி நிலை குறித்து அவர் வேதனை தெரிவித்தவர்.
"உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பெண்கள் கல்வி இல்லாததால், அங்குள்ள இளம் வயது பெண்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக பொம்மைகள் செய்வதற்கும், அரிவாள் செய்வதற்கும், ஈயம் பூசுவதற்கும் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., எம்.ஏ., என உயர்கல்வி படித்து முடிப்பதற்கான தளத்தை அமைத்துக் கொடுத்த பெருமை டாக்டர் கலைஞருக்கு உண்டு."
முதல் பட்டதாரிகளுக்கான சலுகை
முன்னாள் முதல்வர் கலைஞர், குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு அரசுப் பணிகளில் கூடுதலாக ஐந்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று போட்ட உத்தரவால், கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரம் வெகுவாக உயர்ந்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன் விளைவாக, கடந்த ஆண்டை விட அடுத்த ஆண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் கிராமங்களில் இருந்து பட்டம் பெற்றனர் என்ற தகவலையும் அவர் பகிர்ந்துகொண்டார். முடிவில், பட்டம் பெற்ற மாணவிகளை வாழ்த்திய அமைச்சர், "இன்று முதல் வாழ்வில் முன்னேறுங்கள்" என்று உற்சாகமூட்டினார்.
விழாவில் பங்கேற்றோர்
இந்த பட்டமளிப்பு விழாவில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், முன்னாள் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் குணசேகரன், கல்லூரியின் தலைவர் அருட் சகோதரி செபஸ்டினா, கல்லூரியின் செயலர் அருட் சகோதரி கருணா ஜோசப் பாத், மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் காமராசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் எனப் பலரும் விழாவில் பங்கேற்றனர்.






















