எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் என்னும் பெயரில் குறவர் என்பதை நீக்க வேண்டும் - தேனியில் நடந்த போராட்டம்
தமிழக எம்.பி.சி பட்டியலில் நரிக்குறவர் என்னும் பெயரில் குறவர் என்பதை நீக்க வேண்டும், நரிக்கார் என்பதை நரிக்குறவர் என்று அழைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலால் பரபரப்பு.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வனவேங்கைகள் கட்சியின் நிர்வாகிகள் சிலர் தலைமையில் குறவர் இன மக்கள் ஏராளமானோர் வந்தனர். அப்போது அவர்கள் தமிழக எம்.பி.சி பட்டியலில் நரிக்குறவர் என்னும் பெயரில் குறவர் என்பதை நீக்க வேண்டும், நரிக்கார் என்பதை நரிக்குறவர் என்று அழைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை பிடித்து ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்தனர்.
மாநிலங்களில் குடும்ப அரசியலை எதிர்த்து பாஜக போராடி வருகிறது - ஜே.பி.நட்டா
பின்னர் திடீரென்று அவர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் குறவர் என்ற தங்களின் பெயரை வேறு சமுதாயத்தின் பெயருடன் சேர்த்து குறிப்பிடுவதை தடுக்க வேண்டும் என்றும், இதுகுறித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தேனி ஆட்சியர் ஆகியோரில் யாராவது வந்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வாக்குறுதி கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. மறியல் காரணமாக சாலையின் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மறியலில் ஈடுபட்ட ஆண்கள், பெண்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். கைது செய்து வேனில் ஏற்றியபோது, சிலர் வேனை சுற்றி அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது பெண்கள் மேல் ஆண் போலீசார் கை வைத்து தள்ளியதாக கூறி சிலர் போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.
இதையடுத்து மறியல் செய்த 32 பெண்கள் உள்பட 56 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, 4 பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் மணி என்ற கூலித்தொழிலாளி மயங்கி விழுந்தார். சந்திரன் என்ற வாலிபர் தனது வயிற்றில் போலீசார் எட்டி உதைத்ததாக கூறி வலியால் துடித்தார்.
பின்னர் அவர்கள் இருவரும் 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் மறியலில் ஈடுபட்டவர்களை வேன்களில் ஏற்றி தேனியில் உள்ள 2 திருமண மண்டபங்களில் போலீசார் அடைத்தனர். இந்த சாலை மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த மறியல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்