மேலும் அறிய
Advertisement
மதுரையில் 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த வில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு...!
”சங்க காலம் முதல் இன்றுவரை தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறை ஒரு முக்கிய பங்காக உள்ளது’’
வீரக்கல், நடுகல், நினைவுத்தூண், வீரன்கல், சுமைதாங்கிக் கல் எனப் பல வடிவங்களில் பல வகைகளாக, இறந்துபோனவர்களை தியாகிகளாக போற்றிய பண்பாடாக தமிழர் பண்பாடு உள்ளது. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்' என்றார், வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத வள்ளுவர். இதன் பொருள் என்ன? சிறப்பாக வாழ்ந்தவர் தெய்வத்துக்குச் சமமாக வணங்கப்படுவார் என்பதுதான். அதாவது, தமிழர்கள் ஆதியில் தன்னுடைய முன்னோர்களையே வணங்கி வந்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இதன் அடையாளமாக எழுந்தவைதான் நடுகல் வழிபாடு.
இந்த நடுகல்லே நாளடைவில் குலதெய்வமாக வழிபாடு செய்யப்படுகிறது. அதே போன்று போரிலோ, வேறு காரணங்களினாலோ கணவன் இறந்தபின் அவனுடனோ அல்லது தனியாகவோ உடன்கட்டை ஏறி இறந்த மனைவிக்கு அமைக்கப்பட்ட சதிக்கற்களை மாலை கோவில்கள் என்ற பெயரில் மதுரை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் வணங்கி வருகிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே தென்னமநல்லூரில் 600 ஆண்டுகள் பழமையான வில் வீரனின் நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை கள்ளிக்குடி தென்னமநல்லூரில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து .முனீஸ்வரன் தலைமையில் ஆனந்தகுமரன், மணிகண்டன், தர்மர், வைகிராஜா, க.சிவன் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியை மேற்பரப்பு கள ஆய்வு செய்தபோது மண்ணில் பாதி புதைந்த நிலையில் கி.பி.15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வில் வீரன் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
”சங்க காலம் முதல் இன்றுவரை தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறை ஒரு முக்கிய பங்காக உள்ளது. நடுகல் என்பது போரில் இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் வீரம் பேசும் நினைவுக்கல். பெருநிரை (பெருந்திரள் வீரர்களை) விலக்கி மாண்டு போன வீரனுக்காக எடுக்கப்படும் நினைவு கல்லாகும். அதன்படி தென்னமநல்லூரில் கண்டறியப்பட்ட வில் வீரன் நடுகல் சிற்பம் 4 அடி உயரம், 2 அடி அகலம் 12 செ.மீ தடிமனும் கொண்ட கருங்கல்லான தனி பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரனின் உருவத்தில் இடது கையில் வில்லை ஏந்தியவாறு, வலது கை இடுப்பில் செறுகப்பட்ட நீண்ட வாளை பிடித்தவாறும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வலது புறம் சரிந்த கொண்டையானதை அள்ளி முடிக்கப்பட்டும், காதுகளில் காதணி, கழுத்தில் சரபளி சவடி, பதக்கம் போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் எனப்படும் வீரச்சங்கிலியும் காணப்படுகிறது.
சன்னவீரம் என்பது போருக்கு செல்லும் வீரர்கள் அணிவதாகும். வீரனின் முதுகுப் பகுதியில் அம்புக்கூட்டில் 11 அம்புகள் உள்ளது. வீரனின் இடுப்புபகுதியில் சலங்கை மற்றும் பதக்கம் கொண்ட அணிகலன்களும், கை, கால்களிலும் வீரக்கழலும் அணிந்து கொண்டு முன்னங்காலை ஊன்றி போருக்கு செல்லவதை போன்று நின்ற நிலையில் காணப்படுகிறது. இச்சிற்பத்தை ஆய்வு செய்யும்போது இப்பகுதியில் வில் வித்தையில் புகழ் பெற்று இறந்த போர் வீரனின் நினைவை பறைசாற்றுவதற்காக எழுப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். தற்போது மக்கள் வேட்டைக்காரன் கோவில் என்று வழிபட்டு வருகின்றனர் என்றார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 'என் தங்கத்த காணோமே’ : 60 நாய்களுக்கு சரணாலயம்.. வீட்டைச்சுற்றியே சமாதிகள்.. ஆச்சரியம் தரும் முதியவரின் கதை !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion