Iran Protest Trump: ஈரானில் தீவிரமடையும் போராட்டம்; மரண தண்டனை என அரசு அச்சுறுத்தல்; ட்ரம்ப் என்ட்ரி; நடப்பது என்ன.?
ஈரானில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பவர்கள் "கடவுளின் எதிரி" என்றும், அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்றும் அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் எச்சரித்துள்ளார்.

ஈரானில், அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், போராட்டங்களில் பங்கேற்பவர்கள் கடவுளின் எதிராக கருதப்படுவார்கள் என்றும், ஈரானிய சட்டத்தின் கீழ், அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்றும் அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் தீவிரமடையும் மக்கள் போராட்டம் - 116 பேர் உயிரிழப்பு.?
ஈரானில், அதிகரித்து வரும் பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை போன்றவை மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அங்கு அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வரும் இந்த ஆர்ப்பாட்டம், இன்றும் நீடித்து வருகிறது.
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அடக்கி ஒடுக்க, காமேனி தலைமையிலான அந்நாட்டு பாதுகாப்பு படையினரை இறக்கி விட்டுள்ளது. அவர்கள், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகிறது. ஈரானின் 31 மாகாணங்களில் உள்ள 100 நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, ஈரானில் நடப்பது என்ன என்பது பற்றி வெளியுலகிற்கு தெரியாத வகையில் செய்திகளும் முடங்கியுள்ளன. சில அரசு ஊடங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 116 பேர் பலியாகி இருக்கலாம் என, அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.
மரண தண்டனை என அட்டர்னி ஜெனரல் எச்சரிக்கை
இப்படிப்பட்ட சூழலில், ஈரானின் அட்டர்னி ஜெனரல் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும் எவரும் "கடவுளின் எதிரியாக" கருதப்படுவார்கள் என்று அவர் அறிவித்துள்ளார். மேலும், இது ஈரானிய சட்டத்தின் கீழ் மரண தண்டனைக்கு உட்பட்ட குற்றமாகும் எனவும் கூறியுள்ளார்.
அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு அறிக்கையில், அட்டர்னி ஜெனரல் முகமது மொவஹெடி ஆசாத், இந்த சட்டமும் தண்டனையும், போராட்டக்காரர்களுக்கு மட்டுமல்ல, "கலவரக்காரர்களுக்கு உதவியவர்களுக்கும்" பொருந்தும் என்று கூறினார்.
ஈரான் விடுதலைக்கு உதவ தயார் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
இந்நிலையில், ஈரான் போராட்டங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை விதும்புவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரானுக்கு விடுதலை கிடைக்க, அமெரிக்கா உதவத் தயார் என்றும் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, ஈரானில் நடைபெறும் போராட்டங்களுக்கு அமெரிக்காவின் சதி வேலை தான் காரணம் என அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில், ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராடுபவர்களுக்கு ஆதரவாக, ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்க, ட்ரைம்ப் ஆலோசனைகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.





















