தேனி முல்லைப் பெரியாற்றில் தலையில்லாத புத்தர் சிலை - பெளத்த சமயம் இருந்ததற்கான ஆதாரம் இதோ
தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாற்றில் தலையில்லாமல் கிடக்கும் புத்தர் சிலையும், 1500 ஆண்டுகள் பழமையான கோவில் கட்டிடம்.
கிபி 6ம் நூற்றாண்டில் செழித்தோங்கிய பெளத்த மதத்தின் தாக்கம் கிபி 17ம் நூற்றாண்டு வரை இருந்ததற்கான சான்று உண்டு. தேனி மாவட்டத்திலும் பெளத்த சமயங்கள் இருந்திருக்க எடுத்துக்காட்டாக திகழும் முல்லை பெரியாற்றில்(Mullai Periyar) சிதைந்த நிலையில் உள்ள 1500 ஆண்டுகள் பழமையான பெளத்த சமய கோவில் அடையாளங்கள்.
சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் புத்தமதக் குறிப்புகள் கிடைப்பதன் வாயிலாக சங்க காலத்திலும், சங்கம் மறுவிய காலத்திலும் பௌத்த சமயம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கி, தளைத்தோங்கி இருந்தது தெரியவந்துள்ளது. பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்ட புத்தர் சிலைகள் மற்றும் இதர பிற கல்வெட்டுக்கள் என பெளத்த மதம் இருந்ததற்கான சான்றுகள் இருப்பதை உணர முடிகின்றது.
தமிழகத்தில் சங்க காலத்தில்தான் பௌத்த சமயம் வேரூன்றியதாக கருதப்படுகிறது. கிபி ஆறாம் நூற்றாண்டில் செழித்தோங்கிய பௌத்த மதத்தின் தாக்கம் கி பி 16ம் நூற்றாண்டு வரை இங்கு இருந்திருக்கிறது என்பதற்கு தேனி மாவட்டம் கம்பம் அருகே உத்தமபாளையம் வட்டம் எல்ல பட்டி என்ற ஊரில் ஓடும் ஆற்றில் கண்டறியப்பட்ட புத்தர் சிலை அடையாளமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
சிலைக்கு அருகே சுமார் 4 அடி அகலமும் 10அடி நீளமும் கொண்ட செங்கற்களால் ஆன கோவில் கட்டுமானங்கள் சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த செங்கற்களுடைய காலம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சிலை அர்த்த பத்மாசனத்தில் உடலை நன்கு நிமிர்த்திய வண்ணம் தியான நிலையில் கைகளை பற்றி மேல் ஆடையோடு காணப்படுகிறது. 4½ அடி உயரமும் சுமார் 3அடி அகலமும் கொண்ட தலையில்லாத பிரம்மாண்டமாக ஆற்றில் நடுவில் கிடக்கும் புத்தர் சிலை அமைப்பு பிரமிக்க வைக்கிறது. பல ஆண்டுகள் ஆற்றின் நடுவில் பராமரிப்பின்றி கிடப்பதால் சிலை சேதம் அடைந்து வருகிறது. முல்லைப் பெரியாற்றில் தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் கட்டிடமும் புத்தர் சிலையும் இடிபாடு அடைந்திருக்கலாம் என அறியமுடிகிறது .
புத்தர் சிலை இப்பகுதியில் கிடைத்திருப்பதின் வாயிலாக தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெளத்தம் தலைத்தோங்கி இருந்தது என்பதை அறிய முடிகின்றது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இந்தப் எல்லப்பட்டியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1987-ஆம் ஆண்டு மேற்கொண்ட கள ஆய்வுகளில் இரும்பு உருக்கும் தொழிற்சாலை பகுதி வெளிக்கொணரப்பட்டது இதை சுற்றியுள்ள பகுதிகளில் முதுமக்கள் தாழி மண்பாண்டங்கள் சிறிய வடிவிலான தேனீர் கோப்பைகள் மண்ணிற்குள் இருந்ததை கண்டறியப்பட்டு இப்பகுதியில் வரலாறுகலை நினைவூட்டி வருகிறது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். குறிப்பாக தேனி மாவட்டத்தில் குள்ளப்பகவுண்டன்பட்டி , கோம்பை, கூடலூர் எரசைக்க நாயக்கனூர் உள்ளிட்ட பல்வேறு மலையடிவார பகுதிகளில் தொடர்ந்து கிடைக்கும் முதுமக்கள் தாழி , பல்வேறு கல்வெட்டுகள் என வரலாற்றை கூறும் இடங்கள் உள்ளன எனவும் தொல்லியல் துறையினர் தேனி மாவட்டத்தை தனி கவனம் கொண்டு பல்வேறு தொல்லியல் ஆய்வுகளை நடத்த வேண்டும் எனவும் இப்பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்தவர்களை அடையாளம் கான ஏதுவாக இருக்கும் என தேனி மாவட்ட வரலாற்று ஆய்வக ஆய்வாளர்கள் கோரிக்கையும் விடுக்கின்றனர்.