Vande Bharat Railway: தீபாவளிக்காக நெல்லைக்கு 4 கூடுதல் வந்தே பாரத் ரயில்! புறப்படும் நேரம், தேதி எப்போது?
ஒரு சரக்கு மற்றும் ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் துவங்க இருக்கிறது.
நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இப்பண்டிகை வரும் நிலையில், அது ஒருபுறம் வருத்தம் இருந்தாலும் மறுபக்கம் குடும்பத்துடன் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். கடைவீதிகளில் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
நெல்லைக்கு வந்தே பாரத்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலிக்கு கூடுதலாக நான்கு வந்தே பாரத் ரயில் சேவையை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி நவம்பர் 10, 11, 13, 14 ஆகிய நாட்களில் சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் (06055) சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 05.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் அதே நாட்களில் திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயில் (06056) மாலை 03.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த சிறப்பு ரயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பயணிகளின் பேராதரவு காரணமாக திருநெல்வேலிக்கு மட்டும் கூடுதல் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் துவங்க இருக்கிறது.
அதே போல் சென்னை - தூத்துக்குடி தீபாவளி சிறப்பு ரயில்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - தூத்துக்குடி இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06001) சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 10 மற்றும் 12 ஆகிய நாட்களில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். மறு மார்க்கத்தில் தூத்துக்குடி - சென்னை சிறப்பு ரயில் (06002) நவம்பர் 11 மற்றும் 13 ஆகிய நாட்களில் தூத்துக்குடியில் இருந்து மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாத மூன்றடுக்கு குறைந்த கட்டண படுக்கை வசதி பெட்டி, 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு சரக்கு மற்றும் ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் துவங்க இருக்கிறது.