Palani : பழனி அருகே காவலாளி மீது துப்பாக்கிச்சூடு..! 16 தோட்டாக்கள் கண்டுபிடிப்பு..! என்ன நடந்தது..?
பழனி அருகே துப்பாக்கி சூடு. போலீசார் சோதனை நடத்திய சோலனையில் 16துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனியருகே பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை கும்பகோணத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார். தோட்டத்து காவலுக்காக கும்பகோணத்தில் இருந்து கார்த்தி(24) என்ற இளைஞரை அழைத்து வந்து பணியில் அமர்த்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு மோகன்ராஜ் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் தோட்டத்து சாலையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது கார்த்தியின் நெஞ்சில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து காயமடைந்த கார்த்தியை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் மோகன்ராஜ் அனுமதித்தார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஏடிஎஸ்பி சந்திரன் மற்றும் மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி சூடு சம்பந்தப்பட்ட மோப்ப நாயும் வரவைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் போலீசார் செய்த விசாரணையில் சுரேஷ் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் இளமாறன் என்பவரது தோட்டத்து வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்ததையடுத்து, அங்கும் சோதனை நடத்தப்பட்டதில் அங்கிருந்து 16 துப்பாக்கி குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து இரவு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் வேட்டையில் ஈடுபட்டபோது நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனியருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்