Coimbatore Car Blast: கோவை கார் வெடிப்பு சம்பவம் : என்.ஐ.ஏ. வசம் அனைத்து கோப்புகளும் ஒப்படைப்பு..! சூடுபிடிக்கும் விசாரணை..
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, NIA அதிகாரிகளிடம், தமிழ்நாடு காவல்துறை கோப்புகளை ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக, கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணை:
காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது.
பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.
உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு:
இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே ஆன்லைனில் வெடி மருந்துகளை வாங்கிக் கொடுத்தது தொடர்பாக அப்சர் கான் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
Tamil Nadu police handed over the Coimbatore cylinder car blast case documents to NIA last evening, say police officials.
— ANI (@ANI) October 30, 2022