மேலும் அறிய
“நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கும் அதே செங்கல்தான் போலும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்காதது தான் எங்கள் பிரச்னை. அதற்கு முன்பாகவே எதிர்கட்சிகள் அதைப்பற்றிய தவறான பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து விடுகிறார்கள்.
மதுரை மாவட்டம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை பாண்டிக்கோயில் ரிங் ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் மாவட்டம் முழுவதுமுள்ள 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்கள் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,.." இவ்வளவு பெரிய தாய்மார்கள் கூட்டத்தை இவ்வளவு எழுச்சியுடன் எங்குமே பார்த்து இல்லை. கண்ணகி ஒற்றை சிலம்பை வைத்து நீதி கேட்டது மாதிரி, ஒற்றை செங்கல்லை வைத்து நான் நீதி கேட்க காரணமாக இருந்தது இந்த மண் தான். தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்ற அந்த ஒற்றை செங்கல் மதுரையில் எடுத்தது தான்.
கழக ஆட்சி அமையும் போதெல்லாம் மதுரையின் வாழ்வாதாரம் உயர்ந்து கொண்டே போகிறது. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட 75% வாக்குறுதிகள் நிறைவு பெற்றுள்ளன. செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்காதது தான் எங்கள் பிரச்னை. அதற்கு முன்பாகவே எதிர்கட்சிகள் அதைப்பற்றிய தவறான பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து விடுகிறார்கள். ஆனால், கடந்த அதிமுக ஆட்சி பல லட்சம் கோடி கடனையும், அடிமை அரசு என்ற அவப்பெயரையும் தான் விட்டுச்சென்றது. தி.மு.க ஆட்சி அமைந்த பின்னர் செயல்படுத்திய பல திட்டங்கள் பெரும் பயன் அளித்துள்ளன. தமிழகம் முழுவதும் மகளிருக்கான இலவச பேருந்து சேவை மூலம் 220 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுமைப்பெண் திட்டம் மூலம் 1.16 லட்சம் மாணவிகளும், மக்களை தேடி மருத்துவம் மூலம் 1 கோடி மக்களும், காலை உணவு திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் குழந்தைகளும் பயனடைந்து உள்ளனர்.
வாழ்வில் எதிர்நீச்சல் போடும் மகளிர் பொருளாதார ரீதியாகவும் எதிர்நீச்சல் போட உதவும் துடுப்பு தான் இந்த சுய உதவிக்குழு கடன் உதவி. தமிழகத்தில் இதுவரை 50 லட்சம் சுய உதவி குழுக்கள் பயன்பெற்று வருகின்றன. இன்று மதுரை மாவட்டத்தில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்கள் பயன்பெறுகின்றன. மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் எல்லோரும் எங்கள் ஹீரோக்கள். தமிழகத்தில் 517 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களாக உள்ளனர் என்பது எங்களுக்கு மிக பெருமையாக உள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அரசு அளிக்கும் பணம், வெறும் பணம் அல்ல. அது அரசின் அக்கறை, அன்பு.
2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் இன்னும் துவங்கவில்லை. ஆனால், 2021ல் அடிக்கல் நாட்டப்பட்ட கலைஞர் நினைவு நூலக கட்டுமானம் நிறைவுற்று திறப்புக்கு தயாராகி விட்டது. செயல்படும் அரசுக்கும், வாயில் வடை சுடும் அரசுக்கும் இது தான் வித்தியாசம். இந்த பட்ஜெட்டில் கூட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கவில்லை.
இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதும் அதே செங்கல்லை தான் தூக்க வேண்டிய நிலை வரும். மதுரை மக்கள் அத்தனை பேரும் செங்கல்லை கையில் எடுக்கும் முன் நிதி ஒதுக்கி கட்டுமான பணிகளை துவங்குங்கள். மக்கள் எல்.ஐ.சி.யில் முதலீடு செய்த பணம் காணாமல் போகிறது, காஸ் கனெக்சன் மானியம் கிடைக்கவில்லை. இதையெல்லாம் கேட்பதற்கு எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் உங்களை சந்திக்க வருவதில்லை. ஆனால், திமுக அரசு மக்களுடனே இருக்கிறது, இருக்கும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அரசு துணை நிற்கும். உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து உங்களுக்காக உழைப்பேன்" என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion